அபாயகரமான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: மன்மோகன் சிங் எச்சரிக்கை

இந்தியப் பொருளாதாரம் அபாயகரமான நீண்ட பொருளாதார மந்தநிலையின் நடுவே சிக்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்


இந்தியப் பொருளாதாரம் அபாயகரமான நீண்ட பொருளாதார மந்தநிலையின் நடுவே சிக்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சோனியா காந்தி முதன்முதலாக இன்று (வியாழக்கிழமை) நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய அபாயகரமான நிலை குறித்து விளக்கினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,     

"இந்தியா தற்போது அபாயகரமான நீண்ட பொருளாதார மந்தநிலையின் நடுவே சிக்கியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் கருத்து மட்டுமல்ல. தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாரிடம் பேசினாலும், பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கும். 

தற்போதைய பொருளாதார நிலையின் அபாயகரமான பிரச்னையே, பொருளாதார மந்தநிலையில் நாம் சிக்கித் தவிக்கிறோம் என்பதை உணராமல் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதுதான். வேளாண் துறை, ரியல் எஸ்டேட், உற்பத்தி என அனைத்து துறையும் மிக மோசமான சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையைத்தான் இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது. 

இந்த நிலை மாறாவிட்டால், பிறகு வேலைவாய்ப்பில் மிக மோசமான நிலையைச் சந்திக்க நேரிடும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு காலாண்டும் வருவாய் வளர்ச்சி இப்படி சரிந்துகொண்டே இருந்தால், அது வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண் துறைதான் மிக முக்கியப் பங்காற்றுகிறது. நாட்டு மக்களில் 60 சதவீதம் பேர் வேளாண் துறையிலும், வேளாண் துறை சார்ந்தும்தான் இருக்கின்றனர். ஆனால் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, வேளாண் துறையின் வளர்ச்சி 2.7 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்தாண்டு, 3.5 சதவீதமாக இருந்தது. 

பாஜக அரசின் கடைசி 5 ஆண்டில், வேளாண் துறை மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஊதியத் தொகை விகிதம் எந்த மாற்றமுமின்றி தேக்க நிலையில் இருப்பதுதான் இதன் அபாயகரமான புள்ளி.

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, 8 மெட்ரோ நகரங்களில் 4.5 லட்சம் குடியிருப்பு யூனிட்டுகள் காலியாக உள்ளன. இதற்கான தேவையே இங்கு இல்லை. ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்பட்டால், கட்டுமானம் பாதிக்கப்படும். கட்டுமானம் பாதிக்கப்பட்டால், வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். இந்திய ரூபாய் மேலும் மேலும் மோசமடைந்துதான் வருகிறது.   

அதேசமயம், ஏற்றுமதி விகிதத்தை உயர்த்தி அதன்மூலம் நாம் அணுகூலம் பெறலாம். ஆனால், பாஜக அரசின் கீழ் ஏற்றுமதியும் மந்தநிலையில்தான் உள்ளது. இதன் விளைவாக, நிலுவைத் தொகை நாளுக்கு நாள் மோசமடைகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com