நிதி ஒதுக்கீட்டு தேவையை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உள்கட்டமைப்புத் துறை சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீட்டு தேவையை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்


உள்கட்டமைப்புத் துறை சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அவற்றுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:

மத்திய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற வெகு சில நாள்களிலேயே பல சாதனைகளைப் படைத்துள்ளது. ஜம்மு  காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 370ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதாகட்டும்; வேளாண் துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகளாகட்டும்; வங்கிகள் இணைப்பாகட்டும்; ஆரோக்கிய இந்தியா (ஃபிட் இந்தியா) திட்டமாகட்டும், முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் வென்றெடுத்திருக்கிறது மத்திய அரசு.

அதுமட்டுமன்றி, தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, துறை வாரியாக அனைத்து நிறுவனங்களின் தேவை என்னென்ன? தற்போது அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அரசு சார்பில் அந்நிறுவனங்களுக்கு எத்தகைய உதவிகளை அளிக்க வேண்டும்? என்பன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவை ஒருபுறமிருக்க, உள்கட்டமைப்புத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மேம்படுத்தும் பொருட்டு சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு நிதி ஒதுக்கீடுகள் தேவை? என்பதை அக்குழு ஆய்வு செய்து வருகிறது.
அந்தக் குழுவில் பல்வேறு அமைச்சர்கள், நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

உள்கட்டமைப்புத் துறை சார்ந்த திட்டங்களுக்காக ரூ.100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியானது நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வழி வகுக்கும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும்போது, அந்த இலக்கை எட்டிப் பிடிக்க முடியுமா? என்ற சந்தேகம் தேவையில்லை.

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது இயல்பான ஒன்றுதான். சொல்லப் போனால், பொருளாதார வளர்ச்சியில் அதுபோன்ற ஏற்ற இறக்கங்களும் ஒரு பகுதிதான். அதற்காக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந் திருப்பதை நியாயப்படுத்தவில்லை.
அதனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பொருளாதாரச் சூழல் நிலவியிருக்கிறது. அதில் இருந்து நாம் மீண்டு வந்துள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

உணவுத் துறை பணவீக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 சதவீதமாக இருந்தது. தற்போது அது 3.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது அதற்கு ஒரு சான்று. ஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com