இன்றுடன் முடிகிறது விக்ரம் லேண்டர் ஆயுள்காலம்: பலனளிக்காத விஞ்ஞானிகளின் முயற்சி

சந்திரயான் -2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு, நிலவின் மேற்பரப்பில் விழுந்துகிடக்கும் விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுள் காலம்
இன்றுடன் முடிகிறது விக்ரம் லேண்டர் ஆயுள்காலம்: பலனளிக்காத விஞ்ஞானிகளின் முயற்சி


சந்திரயான் -2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு, நிலவின் மேற்பரப்பில் விழுந்துகிடக்கும் விக்ரம் லேண்டரின் 14 நாள் ஆயுள் காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், அதை மீட்டெடுக்க இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
 நிலவில் மிகுந்த குளிருடன் கூடிய இரவுப் பொழுது தொடங்க உள்ளதால், இனி லேண்டரை மீட்டெடுப்பது கடினம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது.  முதலில் புவி சுற்றுப் பாதையில் நிறுத்தப்பட்ட விண்கலம், நீண்ட பயணத்துக்குப் பின்னர், நிலவின் நீள்வட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்கலத்திலிருந்து ஆர்பிட்டரும், லேண்டரும் பிரித்துவிடப்பட்டன. இவ்வாறு, சந்திரயான்-2 விண்கலத்தின் ஒவ்வொரு நிலையையும் திட்டமிட்டபடி மேற்கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.
 இறுதியாக, விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சியை மேற்கொண்டனர். 
இந்த நிகழ்வை நேரலையில் காண பிரதமர் நரேந்திர மோடியும், பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் காத்திருந்தார்.  லேண்டர் பகுதியை திட்டமிட்டபடி நிலவின் பரப்பில் தரையிறக்குவதற்கான முயற்சியை செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை சரியாக 1.30 மணியளவில் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை ஏற்று, நிலவின் பரப்பை நோக்கி தொடர்ந்து தரையிறங்கிக்கொண்டிருந்த லேண்டர், நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவுக்கு வந்தபோது, அதற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டானது. இதனால் லேண்டர் எங்கிருக்கிறது என்பதே தெரியாமல் போனது. இது, இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி, ஒட்டமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்து வரும் ஆர்பிட்டர் பகுதி,  லேண்டர் நிலவின் பரப்பில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடப்பதைப் படம்பிடித்து அனுப்பியது. இது விஞ்ஞானிகளுக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டனர். மேலும், அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகளின் உதவியுடனும், தொடர்பை மீட்டெடுபதற்கான முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
இன்றுடன் ஆயுள்காலம் நிறைவு: இந்த நிலையில், லேண்டரின் 14 நாள் ஆயுள் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளதால், அதனுடன் இனி தொடர்பை ஏற்படுத்துவது கடினம் என்ற நிலை உருவாகியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், நிலவில் 14 நாள்கள் பகல் பொழுதும், 14 நாள்கள் இரவு பொழுதும் இருக்கும். இரவுப் பொழுதின்போது, நிலவில் கடும் குளிர் நிலவும்.
அந்தக் குளிரில் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள சூரியத் தகடுகளும் மற்ற உபகரணங்களும் இயங்குவது கடினம். எனவே, பகல் பொழுது காலமான 14 நாள்கள் மட்டுமே லேண்டரும், அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. 
இந்த 14 நாள் பகல் பொழுது, வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. எனவே, அதனுடன் தொடர்பை ஏற்படுத்துவது இனி கடினம்தான் என்றார்.
மக்களுக்கு இஸ்ரோ நன்றி: இந்தச் சூழலில், தங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்து இஸ்ரோ செவ்வாய்க்கிழமை சுட்டுரைப் பதிவு ஒன்றை வெளியிட்டது. 
அதில், எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் கனவு, நம்பிக்கையின் உத்வேகத்தில், நாங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொள்வோம் என இஸ்ரோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லேண்டர் தரையிறங்கவிருந்த இடத்தை படம் பிடித்தது நாசா
சந்திரயான் 2 திட்டத்தின் ஒரு கட்டமாக, நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தை நாசா தனது விண்கலத்தின் மூலம் புகைப்படம் எடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. 
நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த 7-ஆம் தேதி பிரித்துவிடப்பட்ட விக்ரம் லேண்டர், 
நிலவில் தரையிறங்க குறைந்த தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 
கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் வீழ்ந்த விக்ரம் லேண்டர் சேதமின்றி இருப்பதாகவும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அதைச் சுற்றிவரும் நாசாவின் எல்ஆர்ஓ விண்கலம், விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தை கடந்த 17-ஆம் தேதி புகைப்படம் எடுத்துள்ளது. அந்த விண்கலம், நிலவின் தென்துருவப் பகுதியை முன்பு எடுத்த படங்களுடன், தற்போதைய படத்தையும் ஒப்பிட்டு விக்ரம் லேண்டரின் நிலை குறித்த தகவல்களை ஆய்வு செய்ய இருப்பதாக எல்ஆர்ஓ விண்கலத் திட்டத்தின் துணை விஞ்ஞானியான ஜான் கெல்லர் கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
எல்ஆர்ஓ விண்கலம் படம் எடுத்தபோது, நிலவில் சம்பந்தப்பட்ட இடத்தில் இருளாக இருந்ததால் புகைப்படத்தின் பெரும்பகுதி நிழல்போலத் தெரிவதாகவும், அதை நாசா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com