கரோனா துயரம்: தெருவில் காய்கறி விற்கும் புகழ்பெற்ற மேஜிக் நிபுணர்

கரோனா ஊரடங்கின் காரணமாக உலகப்புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.   
சாம்ராஜ் ஜாதுகர்
சாம்ராஜ் ஜாதுகர்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: கரோனா ஊரடங்கின் காரணமாக உலகப்புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.   

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 27,977 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 884 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.  

இந்நிலையில் கரோனா ஊரடங்கின் காரணமாக உலகப்புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.   

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ் ஜாதுகர். புகழ்பெற்ற மேஜிக் நிபுணரான இவர் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 11,000 மேஜிக் ஷோக்களை நடத்தியுள்ளார். பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் கரோனா ஊரடங்கின் காரணமாக இவருக்கு வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லை. வேறு தொழில் எதுவும் தெரியாத காரணத்தால், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாரின் அன்றாடத் தேவைகளுக்காக இவர் தெருவில் காய்கறி விற்கும் வேளையில் இறங்கியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர், ‘நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. இந்த தருணத்தில் மேஜிக் ஷோக்கள் எதுவும் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. பார்வையாளர்களும் கிடையாது. இந்த சூழ்நிலையில் என்னிடம் பணம் எதுவும் இல்லை. இதன்காரணமாக என்னிடம் வேலை பார்த்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி விட்டேன்.

எனது குடும்பத்தின் பசிப்பிணி போக்க நான் சம்பாதித்தே ஆக வேண்டும். அதற்காக நான் காய்கறி விற்கும் வேளையில் ஈடுபட்டுள்ளேன். சமயத்தில் இப்படி ஒரு வண்டியில், நகரத்தின் சிறு சந்துகளில் திரிந்து விற்பனை செய்வது வெட்கமாக உள்ளது; ஆனால் எனக்கு வேறுவழி இல்லை’ என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com