வீடு வீடாக கரோனா சோதனை: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொளளும் பொருட்டு வீடு வீடாக கரோனா சோதனைக் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.  
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புது தில்லி: நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொளளும் பொருட்டு வீடு வீடாக கரோனா சோதனைக் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.  

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 27,977 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 884 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வீடு வீடாக கரோனா சோதனைக் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.  

தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சஸ்வத் ஆனந்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில் அவர் நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு பிழையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. நாடுமுழுவதும் கரோனா தொற்றுக்கான சோதனை மிகவும் குறைந்த அளவிலேயே செய்யப்படுகிறது.  

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, உலக நாடுகளிலேயே கரோனா சோதனை செய்யப்படோரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிகவும் குறைவு என்பதே காரணமாகும்.

கரோனா சமூகத் தொற்றாக மாறுவதை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விட, பாதிகப்பட்டோருக்கு முழுமையாக சிகிச்சை அளித்து காப்பதில்தான் கவனம் இருக்க வேண்டும். அதற்கு அதிக எண்ணிக்கையில், வீடு வீடாகச் சென்று சோதனை செய்வதே சிறந்தது. எனவே அதுகுறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் பி.எம் கேர்ஸ் நிதி மூலம் திரட்டப்படும் பணம் குறித்தும், அதைக் கையாளும் விதம் குறித்தும் வெளிப்படையாகச் செயல்படுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.  

இந்த மனுவானது நீதிபதி ரமணா தலைமையில், நீதிபதிகள் பால் மற்றும் கவாய் அடங்கிய அடங்கிய அமர்வின் முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது; எனவே நீங்களே இதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது நாங்கள் அபராதம் விதிப்போம்’ என்று நீதிபதி ரமணா தெரிவித்து வழக்கினை விசாரிக்க மறுத்து விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com