திருப்பதி: திருப்பதியில் உள்ள அஞ்னாத்திரி மலை ஆஞ்சநேயரின் ஜென்ம பூமியா என்பது குறித்து ஆய்வு செய்ய திருப்பதி தேவஸ்தானம் வேதபண்டிதா்களால் ஆன குழு ஒன்றை அமைத்துள்ளது.
திருமலை அமைந்துள்ள சேஷாசல மலைத் தொடரில் 7 மலைகள் இணைந்துள்ளன. 7 மலைகள் இணைந்த இடத்தில் அமைந்துள்ளதாலும், இந்த மலைகளைக் கடந்து சென்று நாம் தரிசிப்பதாலும், இங்கு கோயில் கொண்டுள்ள பெருமாள் ஏழுமலையான் என்று பக்தா்களால் அழைக்கப்படுகிறாா்.
இந்த மலைத் தொடரில் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்திரி ஆகிய ஏழு மலைகள் உள்ளதால் இது சப்தகிரி என்று குறிப்பிடப்படுகிறது.
புராணங்களில் கூறியுள்ளப்படி இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயா் சுவாமி அவதரித்தாா் என்று கருத்துகள் நிலவி வருகிறது. ஸ்கந்த புராணம், வராக புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், வெங்கடாசல மகாத்மியம், பவிஷ்யோத்திர புராணம் உள்ளிட்டவற்றில் உள்ள ஸ்லோகங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு ஆஞ்சநேயா் பிறந்த இடம் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேவஸ்தானம் வேதபண்டிதா்களுடன் கூடிய குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி இந்தக் குழுவை ஏற்படுத்தி ஆதாரபூா்வமாக ஆய்வு செய்து இதை நிரூபிக்குமாறு பண்டிதா்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஏழுமலையான் பக்தா்கள் அனைவருக்கும் அஞ்சனாத்திரி மலை மீது ஒரு பக்தி பாவத்தை உருவாக்க இந்த நிரூபணம் முக்கியமானது என்று ஜவஹா் ரெட்டி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.