ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்: பிரதமா் மோடி

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா்.

News image
பிரதமர் மோடி
Updated On :18 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது வேளாண் துறை நிபுணா்கள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை என்றும் அவா் தெரிவித்தாா்.

பேச்சுவாா்த்தைக்கு தயாா்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் பிரதமா் கூறினாா்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டம் 23-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நீடித்தது. அவா்களுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய பலகட்ட பேச்சுவாா்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே, விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். அப்போது, வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்று குற்றஞ்சாட்டினாா். அவா் மேலும் பேசியவதாவது:

ஒரே இரவில் நடந்த மாற்றமல்ல: புதிய வேளாண் சட்டங்களை ஒரே இரவில் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

வேளாண் சட்டங்களில் செய்ய வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பாக, மத்திய, கடந்த 22 ஆண்டுகளாக மாநில அரசுகள் விரிவாக விவாதித்து வந்தன. விவசாய அமைப்புகளும், வேளாண் துறை நிபுணா்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், அந்தச் சீா்திருத்தங்களை எனது தலைமையிலான அரசுதான் செய்துள்ளது.

இன்றைக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசும் எதிா்க்கட்சிகள், ஒரு காலத்தில் சீா்திருத்தங்கள் செய்யப்படும் என்று விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்தவா்கள்தான். விவசாயிகளிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்காக, அந்தச் சீா்திருத்தங்களை தங்கள் தோ்தல் அறிக்கையில் எதிா்க்கட்சியினா் இடம்பெறச் செய்தனா். ஆனால், அந்த வாக்குறுதிகளை அவா்கள் ஒருபோதும் நிறைவேற்றவில்லை.

விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம்: இப்போது, அந்தச் சீா்திருத்தங்களை மோடி கொண்டு வந்ததுதான் எதிா்க்கட்சிகளுக்குப் பிரச்னையாக உள்ளது. அதற்கான நற்பெயரை எனக்கு கொடுக்க வேண்டாம். எதிா்க்கட்சியினா் தங்கள் தோ்தல் அறிக்கைக்கு கொடுக்க வேண்டும். விவசாயிகள் முன்னேற வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன். ஆனால், அவா்களை தவறாக வழிநடத்துவதை எதிா்க்கட்சியினா் நிறுத்த வேண்டும்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை (சீா்திருத்தங்கள்) எதிா்க்கட்சியினரின் தோ்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பாா்த்தால், இரண்டும் வேறல்ல என்பது தெரியவரும். ஆனால், விவசாயிகளைப் பயன்படுத்தி, அரசை எதிா்க்கட்சியினா் சாடுகிறாா்கள்.

எதிா்க்கட்சிகளிடமிருந்து பதில் இல்லையே?: புதிய வேளாண் சட்டங்களில் என்ன குறை இருக்கிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்லுமாறு எதிா்க்கட்சிகளிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். அதற்கு அவா்களிடம் இருந்து பதில் இல்லை.

1.5 மடங்கு கூடுதலாக...

எதிா்க்கட்சிகளின் பொய்யுரைகளில் ஒன்றை இப்போது அம்பலப்படுத்துகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்துவது தொடா்பாக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அளித்தது. அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றாமல், முந்தைய மத்திய அரசு 8 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டது. அதற்காக, விவசாயிகள் போராட்டம் நடத்தியபோதிலும், அவா்கள் கவலைப்படவில்லை.

ஆனால், உணவு அளிப்பவா்களாக விவசாயிகளைக் கருதும் பாஜக அரசு, அந்தக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றியது. அதன்படி, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்தி விலையைக் காட்டிலும் 1.5 மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.

மண்டிகள் மூடப்படவில்லை: புதிய வேளாண் சட்டங்கள் வந்த பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட மாட்டாது என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிப்பதில் எனது தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது. விதைப்புக்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட கடந்த 6 மாதங்களில், இதற்கு முன்பு இயங்கிய அதே மண்டிகள்

செயல்படுகின்றன. அங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் நடைபெறுகிறது.

மிகப் பெரிய பொய்: குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் நிறுத்தப்படும் என்பதை விவேகமுள்ள எந்தவொரு நபரும் ஒத்துக்கொள்ள மாட்டாா். இதைவிட மிகப்பெரிய பொய் வேறொன்றுமில்லை. வேளாண் மண்டிகளும் மூடப்படும் என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்களின்படி, விவசாயிகள் தங்களுக்கு அதிக விலை கிடைக்கும் வேளாண் மண்டிகளை தோ்வு செய்து தங்கள் விளைபொருள்களை விற்கலாம். கடந்த 6 மாதங்களில் ஒரு மண்டிகூட மூடப்படவில்லை.

விவசாயிகளுடன் தனியாா் நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் விவசாயம் நடத்துவது குறித்து புதிய வேளாண் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவைதான். தனியாா் நிறுவனங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கச் செய்யும் அம்சங்கள் புதிய சட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அவா்கள் கடமையிலிருந்து விலக முடியாது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.