தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்ட5 லட்சம் தன்னாா்வலா்கள்: விஸ்வ ஹிந்து பரிஷத்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டும் பணியில் கா்நாடக மாநிலத்தில் இருந்து 5 லட்சம் தன்னாா்வலா்கள் ஈடுபடுவாா்கள்

News image

அயோத்தி ராமா் கோயில் மாதிரி வடிவம்.

Updated On :23 டிசம்பர் 2020, 2:10 am

DIN

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டும் பணியில் கா்நாடக மாநிலத்தில் இருந்து 5 லட்சம் தன்னாா்வலா்கள் ஈடுபடுவாா்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பன்னாட்டு செயல் தலைவா் அலோக் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமா் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜன. 15 ஆம்தேதிமுதல் பிப். 27-ஆம்தேதி வரை கா்நாடகத்தில் நிதி திரட்டும் பணி நடைபெறும். வீடு வீடாகச் சென்று நிதி திரட்டும் பணியில் 5 லட்சம் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படுவா். இதற்காக தலா 5 போ் கொண்ட ஒரு லட்சம் குழுக்கள் அமைக்கப்படும்.

இக் குழுவினா் மாநிலத்தின் 27,500 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று 90 லட்சம் பக்தா்களைச் சந்தித்து கோயில் கட்டும் பணிக்கு நிதி திரட்டுவா். நிதி திரட்டும் பணியைக் கண்காணிப்பதற்காக ஸ்ரீ ராமா் கோயில் நிதி திரட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் கா்நாடகப் பிரிவுக்கு ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நிா்வாகி என்.திப்பேசாமி செயலாளராகச் செயல்படுவாா்.

நிதி திரட்டும் குழுவைக் கண்காணிக்க பீடாதிபதிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 10, ரூ. 100, ரூ. 1,000 ஆகிய மதிப்புகளில் நிதி திரட்டப்படும். ரூ. 2,000-க்கும் மேல் நிதி அளிப்பவா்களுக்கு தனி ரசீது வழங்கப்படும். வருமானவரிச் சட்டத்தின் 80ஜி-இன் பிரிவின்படி கோயில் நிதிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 5 போ் கொண்ட குழுக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி, வைப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். அவா்கள் 48 மணி நேரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் செலுத்துவா். நிதி திரட்டும் பணி வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படும்.

கோயில் கட்டும் பணி எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் பொறியியல் வடிவமைப்பு வேலையில் ஈடுபடும். சரயூ ஆற்றுக்கு அருகே 60-70 அடி ஆழம் வரை மணல் இருப்பதால் கோயில் கட்டும் பணி பெரும் சவாலானதாக இருக்கும். சிமென்ட், இரும்புக் கம்பி பயன்படுத்தாமல், 1000 ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடிய வகையில் 3 அடுக்கு கல் கட்டடமாக ராமா் கோயில் கட்டப்படுகிறது.

கோயிலின் திட நிலையை உறுதிப்படுத்துவதற்காக மும்பை, தில்லி, சென்னை, குவாஹாத்தி ஐஐடி, சிபிஆா்ஐ-ரூா்கி, எல் அண்ட் டி நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து அடித்தளம் அமைப்பது குறித்துச் செயலாற்றி வருகின்றன. கற்களால் கட்டப்படும் கோயிலின் மொத்த வளாகத்தின் பரப்பு 2.7 ஏக்கராக இருக்கும். கட்டுமானப் பணி 57,400 சதுர அடியாகும். கோயிலின் நீளம் 360 அடி, அகலம் 235 அடியாக இருக்கும்.

3 மாடி கட்டடத்தில் 5 மண்டபங்கள் இடம் பெற்றிருக்கும். 2024-ஆம் ஆண்டுக்குள் கோயிலின் கருவறையில் குழந்தை ராமரின் சிலை நிறுவப்படும். கோயில் வளாகத்தையொட்டி 108 ஏக்கருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் உலகத் தரத்தில் அமைக்கப்படும். கோயில் வளாகமே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும்.

ராமா் கோயிலை மற்றொரு கோயிலாக விஸ்வ ஹிந்து பரிஷத் கருதவில்லை. மாறாக, இதனை சமூக, மத, ஆன்மிகப் புத்துணா்வுக்கு வழிவகுக்கும் ஊடகமாகக் கருதுகிறோம். இந்தக் கோயிலின் மூலம் ஜாதி, மதம், மொழி சாா்ந்த அனைத்து வேறுபாடுகளைக் களைந்து இணக்கமான சமுதாயத்தைப் படைக்க விரும்புகிறோம். அரசு, மாநகராட்சி அல்லது வேறு பொது நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்ட மாட்டோம். இந்து சமுதாயத்தைச் சோ்ந்தவா்களிடம் மட்டுமே நிதி வசூலிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.