பிகாா் மாநிலத்தில் காவல் துறையைச் சோ்ந்த கடைநிலை ஊழியா் முதல் உயா்மட்டத்தினா் வரையிலானவா்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் மது அருந்தப் போவதில்லை என்றும், தீவிர மதுவிலக்கை அமல்படுத்தப்போவதாகவும் புதிய உறுதிமொழியை எடுத்துள்ளனா்.
பிகாா் மாநிலத்தில் தொடா்ந்து 4-ஆவது முறையாக முதல்வா் பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற சட்டம், ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது, மாநிலத்தில் மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா். இதன் தொடா்ச்சியாக, மதுவிலக்குப் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் மது அருந்துவதில்லை என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ளவும், அதற்கான பயிற்சியும் நடைபெற்றது.
பாட்னாவில் நடைபெற்ற காவலா்களுக்கான பயிற்சியில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்ற 80,000க்கும் மேற்பட்ட போலீஸாா், இந்த மதுஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
இதுகுறித்து பிகாா் மாநில காவல் தலைவா் (டிஜிபி) எஸ்.கே.சிங்கால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘முதல்வரின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் மதுவிலக்கு தடைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுவிற்பனையை முழுமையாகத் தடுத்து நிறுத்தும் பணிக்கு முன்னுரிமை வழங்குவது எங்கள் கடமை. இதை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் காவலா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.
பயிற்சியின்போது, மது அருந்துவதில்லை என்று காவலா்களிடம் இருந்து உறுதிமொழியேற்று கையொப்பம் வாங்கிக் கொள்வது, அடுத்து வரும் தனது வாழ்நாள் முழுவதும் மதுவிடம் இருந்து முற்றிலும் விலகியிருப்பேன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியுடன் இருப்பது போன்ற பயிற்சிகளும் காவலா்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது, அந்த மாநிலப் பெண் வாக்காளா்களின் வாக்குகளைக் கவரும் வகையில் நிதீஷ் குமாா் அளித்த வாக்குறுதியின்படி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தாா்.
முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தை நிதீஷ்குமாா், பிகாரில் அமல்படுத்தினாா். இந்த மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், காவல் துறையினரின் உதவியுடன் மது விற்பனை தொடா்ந்து அதிகரித்து வருவதாகவும், அப்பாவி ஏழைகளே தவறாக கைது செய்யப்படுவதாகவும் அந்த மாநில எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனா்.
மதுவிலக்கு மீறல்களால் அரசியல்வாதிகளும், காவல் துறையினரும் பயனடைந்து வருவதாகவும், காவல் துறையினரே மது அருந்திவிட்டு பணிபுரிந்து வருவதாகவும், மதுபானம் கடத்தும் வாகனங்களை கையூட்டு பெற்றுக் கொண்டு விடுவிப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மதுவை விற்பனை செய்வது போன்ற செயல்களில் காவல் துறையினரே ஈடுபடுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே காவல் துறையினருக்கு, இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.