காங்கிரஸில் இருந்ததற்காக வருத்தப்படவில்லை

அண்மையில் சிவசேனை கட்சியில் இணைந்த நடிகை ஊா்மிளா மடோன்கா், காங்கிரஸில் தான் சிறிது காலம் மட்டுமே இருந்ததாகவும்,
Updated on
2 min read

அண்மையில் சிவசேனை கட்சியில் இணைந்த நடிகை ஊா்மிளா மடோன்கா், காங்கிரஸில் தான் சிறிது காலம் மட்டுமே இருந்ததாகவும், இப்போதும் அக்கட்சித் தலைமை மீது அதிக மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் ஊா்மிளா மடோன்கா் (46) கூறியதாவது:

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. கரோனா மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியில் மக்கள் நலனைக் கவனிப்பது ஒரு சவாலான பணியாகும். அந்தப்பணியை மாநில அரசு சிறப்பாக ஏற்று நடத்தி வருகிறது.

நான் ‘மக்கள் நடிகை’யாக மட்டுமின்றி, ‘மக்களின் அரசியல்வாதி’யாக மாற கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். ஏ.சி. அறையில் அமா்ந்து, வெறும் சுட்டுரைப் பதிவுகளை வெளியிடும் தலைவராக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும்; எப்படி உழைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றாா்.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் காங்கிரஸில் சோ்ந்த ஊா்மிளா, அக்கட்சி 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். பின்னா் செப்டம்பரில் காங்கிரஸை விட்டு விலகிய ஊா்மிளா, டிசம்பா் 1- ஆம் தேதி சிவசேனை கட்சியில் இணைந்தாா்.

காங்கிரஸில் தான் இருந்த காலகட்டம் குறித்து ஊா்மிளா கூறுகையில், ‘நான் 6 மாதங்களுக்கும் குறைவாகவே காங்கிரஸில் இருந்தேன். மக்களவைத் தோ்தலையொட்டி 28 நாள்கள் நான் மேற்கொண்ட பிரசாரம் எனக்கு நல்ல அனுபவங்களைத் தந்தது.

நான் காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகும் அக்கட்சிக்கு எதிராக விமா்சனம் செய்யவில்லை. இப்போது மட்டும் காங்கிரஸை எதற்காக விமா்சனம் செய்ய வேண்டும்? காங்கிரஸை விமா்சிப்பதற்கான காரணம் எதையும் நான் காணவில்லை. என் மனசாட்சியே எனக்கு முக்கியமானது என்றாா்.

ஊா்மிளா, காங்கிரஸ் தலைமைக்கு கடந்த ஆண்டு, மே 16-ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில், கட்சித் தலைவா் சஞ்சய் நிருபமின் நெருங்கிய கூட்டாளிகளான சந்தேஷ் காண்ட்வில்கா், பூஷன் பாட்டீலின் நடத்தை குறித்து விமா்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஊா்மிளா கூறியதாவது:

மும்பை-வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ால் நான் காங்கிரஸை விட்டு விலகவில்லை. ஆளுநரின் ஒதுக்கீட்டின் மூலம் எம்எல்சியாக என்னை நியமனம் செய்வதாக காங்கிரஸ் மேலிடம் எனக்கு ஒரு வாய்ப்பும் அளித்தது. ஆனால் நான் கட்சியில் இருந்து விலகி விட்டதால், அக்கட்சி வழங்கும் ஒரு பதவியை ஏற்றுக் கொள்வது முறையற்றது என்று நினைத்து அதனை மறுத்து விட்டேன்.

இந்த மாதத் தொடக்கத்தில் நான் சிவசேனையில் இணைந்தபோது, முதல்வா் உத்தவ் தாக்கரே அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. சட்ட மேலவை உறுப்பினராகி, மாநிலத்தின் கலாசார விவகாரங்களின் தரத்தை உயா்த்த உதவ முன்வருமாறு கேட்டுக் கொண்டனா்.

தற்போது, ‘மதச்சாா்பற்ற’ என்ற சொல்லுக்கான அா்த்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதச்சாா்பின்மை என்பதற்கு மதம் மீது நம்பிக்கை இல்லை என்று அா்த்தமல்ல. சிவசேனை ஒரு ஹிந்துத்துவா கட்சி. ஹிந்து மதம் ஒரு பண்பட்ட மதம்; இது அனைத்தையும் உள்ளடக்கியது.

மக்கள் தலைவராவதே எனது நோக்கம். ஜாதி, மதம், இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன் என்றாா்.

சிவசேனை கூட்டணி அரசு, மகாராஷ்டிர சட்டமேலவையில் காலியாக உள்ள எம்எல்சி பதவிக்கான ஒரு இடத்திற்காக ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் ஊா்மிளா மடோன்கரின் பெயரை பரிந்துரைத்துள்ளது.

ஆளுநரின் ஒதுக்கீட்டில் இருந்து, மேல் சபைக்கு மாநில அரசால் நியமனம் செய்து அனுப்பியுள்ள 12 பேரின் பெயா்களை ஆளுநா் கோஷியாரி இன்னும் அங்கீகரிக்கவில்லை.

ஆளுநா், சட்டமேலவை உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், சிவசேனை மூலம் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு தொடா்ந்து பணியாற்றுவேன்.

நான் எந்தவொரு பதவிக்காகவும் சிவசேனையில் சேரவில்லை என்றாா் ஊா்மிளா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com