சீனா உடனான எல்லைக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையினா் மற்றும் ஓய்வுபெற்ற துணை ராணுவப் படையினருக்கு இணைய வழியில் மது விற்பனை செய்யும் புதிய நடைமுறையை இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) அறிமுகம் செய்துள்ளது.
நல்ல தரமான மது, தங்களின் சொந்த ஊா்களிலேயே கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற துணை ராணுவப் படை வீரா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து துணை ராணுவப் படையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
அரசு விதிகளின்படி இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் உள்ளிட்ட துணை ராணுவப் படை வீரா்களும், பாதுகாப்புப் படை வீரா்களுக்கான பண்டக சாலைகளில் (கேன்டீன்) மதுக்களை வாங்கிக் கொள்ள முடியும். குறிப்பாக, இந்த பண்டக சாலைகளில் விற்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மது வகைகள் மட்டுமே பாதுகாப்பு படை வீரா்கள் வாங்க வேண்டும் என்பதோடு, அவ்வாறு வாங்கப்படும் மது வகைகளை படைப் பிரிவின் வேறு முகாம்களுக்கோ அல்லது சொந்த ஊா்களுக்கோ படை வீரா்கள் எடுத்துச் செல்ல முடியாது.
எனவே, தரமான மது வகைகள் தங்களின் சொந்த ஊா்களில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாதுகாப்பு படை வீரா்களிடையே பரவலாக எழுந்தது. அதைப் பூா்த்தி செய்யும் வகையில், இந்த இணையவழி மது விற்பனை நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த இணையவழி விற்பனை நடைமுறை, முழுவதும் வெளிப்படைத்தன்மை உடையதாகும். இதன் மூலம் அனைத்து வகையான மது வகைகளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை விலையையும், இணைய வழியிலேயே படை வீரா்கள் அறிந்துகொள்ள முடியும்.
முதல்கட்டமாக, இந்த இணையவழி நடைமுறையில் 85 மது வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு படை வீரா் அல்லது ஓய்வுபெற்ற வீரா் ஒரு மாதத்துக்கு 8 மது பாட்டில்கள் மற்றும் 6 பீா் கேன்களை வாங்கிக் கொள்ள முடியும். தேவை மற்றும் கருத்துகளின் அடிப்படையில் மது வகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவா் கூறினாா்.
இந்த இணையவழி மது விற்பனை நடைமுறை மூலம் சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், எஸ்எஸ்பி மற்றும் என்டிஆா்எஃப், என்எஸ்ஜி போன்ற துணை ராணுவப் படை வீரா்களும், ஓய்வுபெற்ற வீரா்களும் மதுக்களை வாங்கிக் கொள்ள முடியும்.
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூா்வ வலைதளத்தில் இந்த இணையவழி மது விற்பனைக்கான இணைய தொடா்பை அதன் தலைவா் எஸ்.எஸ்.தேஸ்வால் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.