

இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகள் விடுபட்டு தமது விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய பழைய காணொலியை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை வைத்து ராகுல் காந்தி அரசியல் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை தனியாரிடம் நேரடியாக விற்பனை செய்ய இச்சட்டங்கள் வழிவகுக்கும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், வேளாண் துறைக்கான அரசின் ஆதரவை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இப்போராட்டத்துக்கு காங்கிரஸ்
கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தபோது மக்களவையில் பேசியதன் காணொலியை பாஜக தலைவர் நட்டா தனது சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். அந்த உரையில் ராகுல் காந்தி, "உத்தரபிரதேசத்துக்கு நான் சென்றிருந்தபோது ஒரு விவசாயியை சந்தித்தேன். அப்போது அவர், விவசாயிகள் உருளைக்கிழங்கை கிலோ 2 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதேவேளையில், ஓர் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டின் விலை 10 ரூபாயாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ள மாயாஜாலம் என்ன என்று கேட்டார். அதன் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் என நான் திருப்பிக் கேட்டபோது, தொழிற்சாலைகள் எங்கள் பகுதியிலிருந்து வெகுதொலைவில் உள்ளன. விளைபொருளை நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இடைத்தரகர்களுக்கு எந்தத் தொகையும் கொடுக்காமல் அனைத்து தொகையும் எங்களுக்கு கிடைக்கும் என அந்த விவசாயி தெரிவித்தார். ஓர் உணவுப் பூங்காவின் பின்னணியில் இருந்த யோசனை இதுதான். அமேதி மற்றும் உத்தரபிரதேசத்தின் 10 முதல் 12 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதற்காகத்தான் போராடி வருகிறார்கள்' எனப் பேசுவதுபோல் உள்ளது.
ராகுலின் இந்தக் காணொலியைப் பதிவிட்டுள்ள நட்டா, "என்ன மாயாஜாலம் நடக்கிறது ராகுல்? முன்பு நீங்கள் ஆதரித்ததை இப்போது எதிர்க்கிறீர்கள். நாட்டின் நலனுக்காகவோ, விவசாயிகளின் நலனுக்காகவோ நீங்கள் எதுவும் செய்யவில்லை. அரசியல் மட்டும்தான் செய்கிறீர்கள். ஆனால், உங்களது பாசாங்கு வேலை செய்யாது. நாட்டு மக்களும் விவசாயிகளும் உங்களது இரட்டை நிலைப்பாட்டை உணர்ந்து கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.