

ரத்தப் பரிசோதனைக்காக நோயாளிகள் கொடுக்கும் ரத்த மாதிரிகள், பல நேரங்களில் பரிசோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றப்படுவதாக நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக வலைத்தளம் மூலம் இயங்கும் அமைப்பானது நடத்திய ஆய்வில்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் பற்றி எழுப்பப்பட்ட 6 கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதிலில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் பல நேரங்களில் உரிய முறையில் சோதிக்கப்படாமலேயே சிங்கில் ஊற்றுகிறார்கள், நோயாளிகளுக்கு தவறான தகவல்களை ரிப்போர்ட்டாக வழங்குகிறார்கள் என்றே பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதாவது, ஒரு நோயைக் கண்டறிய செய்யப்படும் சோதனைக்கும், இருக்கும் நோய்க்கும் எந்த தொடர்புமே ஏற்படுத்தப்படுவதில்லை. இதனால் பல நோயாளிகளுக்கு சரியான முறையில் நோய் கண்டறியப்படாமலேயே தவறான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
எனவே, மருத்துவத் துறையில் மிக முக்கிய அங்கமாக இருக்கும் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று மருத்துவத் துறை நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எடுக்கப்பட்ட சர்வேயில், 34% பேர் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களின் ஆய்வு முடிவுகளை நம்புவதே இல்லை என்றும், 34% பேர் தங்களுக்கு தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
மேலும், இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவத் தவறுகள் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்கு முறையாக பயிற்சி கிடைக்கப்பெறாததே என்றும் ஹார்வேர்ட் பேராசிரியர் ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.
நோயாளிகளை கவரும் வகையில், குறைந்த கட்டணத்திலும், குறைந்த நேரத்திலும் ரத்தப் பரிசோதனைகளை அளிப்பதாக மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் விளம்பரம் செய்கின்றன. இவையும், போதிய பயிற்சி பெற்ற ஊழியர்கள் இன்மையும் காரணமாக, பல ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படாலேயே சிங்கில் ஊற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பரிசோதனைக் கூடங்களில்தான் சோதனை செய்ய வேண்டும் என்று நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருத்துவர்கள், அந்த மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்குச் சென்று அங்கு முறையாக ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதை மருத்துவர்கள் சோதிப்பது உண்டா என்ற கேள்வியும் இந்த ஆய்வில் கேள்வி முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.