சயனைடு கொலையாளி ஜோலி தற்கொலைக்கு முயற்சி: கூடத்தாயி தொடர் கொலையின் முழு விவரம்

கேரள மாநிலம் கூடத்தாயி தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி ஜோலி கோழிக்கோடு மாவட்டச் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சயனைடு கொலையாளி ஜோலி தற்கொலைக்கு முயற்சி: கூடத்தாயி தொடர் கொலையின் முழு விவரம்

கோழிக்கோடு: கேரள மாநிலம் கூடத்தாயி தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி ஜோலி கோழிக்கோடு மாவட்டச் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில், சிறையில் இருந்த ஜோலி, தனது இடது கையின் நரம்புகளை கூர்மையான ஏதோ ஒன்றினால் துண்டிக்க முயன்று காயத்துடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளில் சொத்து மற்றும் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை அடுத்தடுத்து சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் உறவினர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஒன்று போல மரணம் அடைந்தது குறித்து எழுந்த சந்தேகத்தை விசாரித்த காவல்துறையினர், இந்த கொலையில் அதேக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தொடர்பிருப்பதைக் கண்டறிந்தனர்.

தாமரசேரி அருகே உள்ள கூடத்தாயி என்ற பகுதியில் நடந்த இந்த கொலையில், ஒரே ஒரு தடயம் மட்டுமே, கொலையாளியைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவியுள்ளது. அது என்னவென்றால், அனைத்து கொலைகளும் நடக்கும் போது ஒரே ஒரு பெண்தான் உடன் இருந்துள்ளார் என்பதுதான்.

இந்த கொலைகள் குறித்து புகார் வந்ததும், குடும்பத்தில் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் யார் மீதும் பெரிதாக சந்தேகம் எழவில்லை. தொடர் விசாரணையில் ஒரு சில தடயங்கள் கிடைத்தன.

இதையடுத்து, உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு ரசாயன சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அனைவரும் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

மேலும் ஒரு முக்கிய ஆதாரம் என்னவென்றால் அனைவருமே ஒரே ஒரு பெண் அளித்த உணவை சாப்பிட்ட பிறகு நிலைகுலைந்து உயிரிழந்திருக்கிறார்கள் என்பதே.

தாமரசேரி கூடுதல் தாசில்தாரின் மகள் ஜெயஸ்ரீ மற்றும் தனது கணவரின் சகோதரி, ஒரு தொழிலதிபர் என அவரது கொலைப் பட்டியலில் இன்னும் சிலரின் பெயர்களும் இருக்கின்றன.

அன்னம்மா - டாம் தாமஸ் தம்பதியின் இளைய மகன் ராய் தாமஸின் மனைவி ஜோலிதான் இந்த கொலைகளுக்குப் பின்னணியில் இருந்துள்ளார். அன்னம்மா தம்பதியின் சொத்துக்காகவும், கணவரின் உறவினர் மீதான ஈர்ப்பினாலும் இந்த கொலைகளை அவர் செய்துள்ளதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த கொலை 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிகழ்ந்துள்ளது. முதல் பலி அன்னம்மா.. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. ஆட்டுக்கால் சூப் சாப்பிட்ட அன்னம்மா, நிலைகுலைந்து பலியானார். இதேப்போல ஒரு சில ஆண்டுகளில் இவரது கணவரும், ஜோலியின் மாமனாருமான டாம் தாமஸை 2008ல் கொலை செய்தார்.  பிறகு, கணவரையும் கொன்றுவிட்டால் சொத்துக்களை கைப்பற்றலாம் என்று நினைத்த ஜோலி, 2011ல் தனது கணவர் ராய் தாமஸுக்கும் சயனைட் கொடுத்து கொலை செய்தார்.

மேற்கண்ட மூவருமே உணவு உண்ட ஒரு சில நொடிகளில் பலியாகினர். இதில் ஏதோ சதி இருக்கிறது என்று பலரும் முணுமுணுத்தாலும், இது பற்றி பெரியதாக யாருக்கும் சந்தேகம் எழாததால் அனைவரும் அப்படியே விட்டுவிட்டனர்.

இவர்களது கொலையின் போது கேள்விகளை எழுப்பிய அன்னம்மாவின் சகோதரன் மாத்யூ, தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைத்த ஜோலி, அவரையும் 2014ல் அதே பாணியில் தீர்த்துக் கட்டினார்.

இதற்கிடையே, மாமனார் டோம் தாமஸின் சகோதரன் மகன் ஷாஜூ சக்கரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஜோலி, அவரது 2 வயது மகன் ஆல்பைனுக்கு 2014ம் ஆண்டு கோழிக் குழம்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தார்.

சரியாக ஒன்றரை ஆண்டுகள் கழித்து 2016ல், ஷாஜூவின் மனைவி சிலியை கொலை செய்தார். குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து ஷாஜுவுக்குக் கொடுக்க அவர் ஒரு சில நொடிகளில் மரணித்தார்.

சிலி இறந்து ஓராண்டில், ஷாஜூவை ஜோலி திருமணம் செய்து கொண்டார். தான் நினைத்ததை எல்லாம் நடத்தி விட்டதாக நிம்மதியாக இருந்தார் ஜோலி.

ஆனால், இந்த தொடர் கொலைகளில் சந்தேகம் எழுந்து, அன்னம்மாவின் மற்றொரு மகன் ரோஜோ காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, காவல்துறையினர் மெல்ல இது பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இதுபற்றி விசாரணை நடத்தி வந்த எஸ்ஐ ஜீவன் ஜார் கூறுகையில், கைது செய்யப்பட்டிருக்கும் ஜோலி, அனைத்து கொலைகளையும் ஒப்புக் கொண்டார். அவருடன், சயனைடு வாங்கிக் கொடுத்ததற்காக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

என்ஐடியில் பணியாற்றுவதாகக் கூறியிருந்த ஜோலி, பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது மட்டுமல்ல, இடையே, கணவரின் சகோதரி ரெஞ்சி என்பவரையும் ஜோலி கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அவர் உடனடியாக வாந்தி எடுத்துவிட, அவர் உயிர் தப்பிய விவரமும் தற்போது ஜோலி கூறியதால் தெரிய வந்துள்ளது.

உணவில் சயனைடு விஷம் வைத்துக் கொள்வதுதான் ஜோலியின் வழக்கமான ஜோலி. அனைவரையுமே ஒரே முறையில் கொலை செய்திருக்கும் ஜோலி, இரண்டு பெண் குழந்தைகளையும் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவர்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இவரது சில கொலை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. காரணம், இவரைப் பற்றி குடும்பத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்ததால், இவரிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருந்துள்ளதே காரணம் என்கிறார்கள்.

ஆனால் இவரது கொலைகளுக்கும், கொலை செய்யவிருந்த திட்டங்களுக்கும் என்ன நோக்கம் என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்புகின்றனர். அதில்லாமல், இவர் மீது சந்தேகம் எழுந்தும், யாருமே காவல்நிலையத்தில் புகார் கொடுக்காதது ஏன் என்பதும் கேள்வியாக தொக்கி நிற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com