கரோனா எதிரொலி: தில்லியில் சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவலம்

கரோனா எதிரொலியால் தில்லியில் சவக்குழிகளுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டிய அவலம் நேரிட்டுள்ளது.
கரோனா எதிரொலி: தில்லியில் சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவலம்


புது தில்லி: ரயில் மற்றும் திரையரங்குகளுக்கு முன் பதிவு செய்யும் வசதியை மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த நிலையில், கரோனா எதிரொலியால் தில்லியில் சவக்குழிகளுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டிய அவலம் நேரிட்டுள்ளது.

கரோனா பாதித்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் வாழும் முஸ்லிம் மக்கள், உடல்களை நல்லடக்கம் செய்யத் தேவையான இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தங்களுக்கான மயானங்களில், சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்வது அல்லது ஏற்கனவே தங்களது குடும்பத்தினர் பயன்படுத்திய இடத்தை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய தில்லியில் லோக் நாயக் மருத்துவமனைக்குப் பின்புறம் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முஸ்லிம் மக்களுக்கான மெஹ்ன்டியன் மயானத்தில் ஒரு சவக்குழிக்கு ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இங்குதான், புகழ்பெற்ற முஸ்லிம் மதத் தலைவர் ஷா வலியுல்லாவின் உடல் அவரது தந்தையின் உடலுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மயானத்தில் தங்கள் குடும்ப உறுப்பினரின் உடல்கள் புதைக்கப்படுவதை பலரும் அங்கே பெருமையாகக் கருதுவதால், இந்த மயானத்தில் சவக்குழிகளை பலரும் முன்பதிவு செய்து கொள்கிறார்கள்.

தற்போது வரை மெஹ்ன்டியன் மயானத்தில் கரோனா நோயாளிகள் யாரையும் புதைக்க அனுமதியில்லை. கரோனா இல்லாதவர்களின் உடல்களை புதைக்க மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. இங்கு 20 ஆண்டுகளாக சவக்குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்தாக் கூறுகையில், முன்பதிவு இல்லாமல், இந்த மயானத்தில் யாரையும் நல்லடக்கம் செய்யவே முடியாது. இந்த மயானத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கட்டணம். குறிப்பிட்ட இடத்துக்குள் நல்லடக்கம் செய்ய ஒரு லட்சம் வரை கட்டணம், அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் இடங்களுக்கு ரூ.30 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூட சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் குடும்பங்கள் இருக்கிறது என்கிறார்.

இது பெருமைக்காக, தங்கள் பாரம்பரியத்தைத் தொடர முஸ்லிம் மக்கள் பல ஆண்டுகாலமாக பின்பற்றி வரும் நடைமுறையாக உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை தற்போது அனைவருக்குமானதாக மாற்றியிருக்கிறது கரோனா தீநுண்மி.

கொலைக்காரக் கரோனா
ஜத்தித் கப்ரிஸ்தான் ஆஹ்லே இஸ்லாம்.. தில்லி கேட் பகுதியில் அமைந்திருக்கும் மற்றொரு முஸ்லிம் மக்களுக்கான மயானம். இதுதான் அந்நகரில் முதல் முறையாக கரோனா நோயாளிகளைப் புதைக்க என அறிவிக்கப்பட்ட மயானமாகும். பல்வேறு மயானங்களில் கரோனா நோயாளிகளைப் புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால் தில்லி அரசே இதனை அறிவித்தது.

இதன் மேற்பார்வையாளர் மொஹம்மத் ஷமீம் (38), பரம்பரை பரம்பரையாக இந்த வேலையை செய்து வருகிறார். இதே மயானத்துக்குள் தான் இவர் தனது குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். கரோனா நோயாளிகளை நல்லடக்கம் செய்ய பல தொழிலாளர்கள் மறுக்கிறார்கள். ஆனால் நான் மறுக்காமல் செய்து வருகிறேன். ஏன் என்றால், யாராவது செய்து தானே ஆக வேண்டும் என்கிறார் மிக அர்த்தமுள்ள வார்த்தையால்.

உயரும் உயிர்பலி
இதுவரை கரோனா நோயாளிகள் 227 பேரின் உடல்களை இங்கே நல்லடக்கம் செய்துள்ளேன். கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும், எங்களை தொடர்பு கொண்டு முன்கூட்டியே சவக்குழிகளை முன்பதிவு செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்தோடு கூறுகிறார்.

ஒரு உடலை நல்லடக்கம் செய்ய ரூ.100 தான் தனக்குக் கூலியாகக் கிடைப்பதாகவும், தற்போதெல்லாம் வேகமாக வேலை ஆக வேண்டும் என்பதற்காக குழி தோண்ட ஜேசிபி வாகனங்களை வரவழைத்து, அதற்கான கட்டணத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் வசூலிக்கிறார்கள். இதனால் ஏழை மக்கள் கடும் வேதனைக்கு உள்ளாவதாகவும் அவர் குமுறுகிறார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வரும் ஒரு முதியவர் தன்னைத்தொடர்பு கொண்டு மயானத்தில் தனக்காக ஒரு குழியை முன்பதிவு செய்து கொண்டுள்ளார். இங்கே நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது என்கிறார் ஷமீம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com