கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியதை ஒப்புக்கொள்ள மத்திய அரசு பிடிவாதம்: நிபுணர்கள்

கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியதை ஒப்புக்கொள்ள மத்திய அரசு பிடிவாதம்: நிபுணர்கள்


புது தில்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறிவிட்டது, ஆனால் நாட்டின் உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வகையில் ஐசிஎம்ஆரின் தரவுகள் இல்லை என்று நிபுணர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

மேலும், நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் எந்த நிலையில் இருக்கிறது என்ற தற்போதைய சூழ்நிலையை காட்டும் வகையில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வுகளில் கிடைத்திருக்கும் தரவுகள் அமைந்திருக்கவில்லை, அதில்லாமல், கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டது என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கடந்த வியாழக்கிழமை பேசுகையில் தெரிவித்திருந்தது குறித்து, தொற்றுநோய் பரவல் துறை, பொது சுகாதாரம் மற்றும் மருந்தியல் துறையைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எம்.சி. மிஷ்ரா கூறுகையில், இந்தியாவின் பல பகுதிகளில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், தற்போது கரோனா தொற்றுப் பரவல் வேகமாகப் பரவி வருகிறது, இதுவரை கரோனா தொற்று இல்லாத இடங்களுக்கும் தொற்றுப் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மத்திய அரசு, சமூகப் பரவலாக மாறியதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள், தங்களுக்கு கரோனா தொற்று பரவாது என்ற மனநிறைவு அடைய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிடும் போது, வெறும் 26,400 பேருக்கு செய்யப்படும் பரிசோதனையை மட்டும் அடிப்படையாக வைத்து, அளவுகோலை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

தொற்றுநோய் துறை நிபுணர் ஷாஹித் ஜமீல் கூறுகையில், இந்தியாவில் பல நாள்களுக்கு முன்பாகவே கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது. ஒரே ஒரு விஷயம்தான், அதை சுகாதாரத் துறை ஒப்புக் கொள்ளவில்லை. அவ்வளவுதான். ஐசிஎம்ஆர் கொடுக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையிலேயே கூட பார்த்தால், கரோனா பாதிக்கப்படும் நோயாளிகளில் 40% பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களாகவோ, கரோனா நோயாளிகளுடன் இருந்தவர்களாகவோ இல்லை. அப்போது இது சமூகப் பரவல் இல்லையா, அப்படி என்றால் வேறென்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போர்டீஸ் எஸ்கார்ட்ஸ் ஃபரிதாபாத்தின் நுரையீரல் துறைத் தலைவர் டாக்டர் ரவி ஷேகர் ஜா கூறுகையில், இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதை பல நாள்களுக்கு முன்பே நான் உணர்ந்தேன். கரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியை அரசு நிறுத்திவிட்டது. முதலில் அதனை வெகு தீவிரமாக செய்து வந்தது. ஆனால் கடந்த சில நாள்களாக அதனை தில்லியோ, வெறு எங்குமோ செய்வதில்லை. அவர்களுக்கும் தெரியும், சமூகப் பரவலாகிவிட்டது என்பது. ஆனால் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

போர்டீஸ் எஸ்கார்ட்ஸ் ஃபரிதாபாத்தின் நுரையீரல் துறையின் இயக்குநர் டாக்டர் மனோஜ் கோயல் கூறுகையில், நாடு முழுவதும் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா இல்லையா என்பது வேண்டுமானால் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால், தில்லி மும்பை, ஆமதாபாத் பகுதிகளில் நிச்சயம் சமூகப் பரவலாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com