தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கிரஸ் எம்பி-க்கள் இடைநீக்கம்: மக்களவைத் தலைவர் தலைமையில் குழு அமைப்பு

மார்ச் 2 முதல் 5 வரை மக்களவையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடத்த அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :6 மார்ச் 2020, 10:47 am

DIN


மார்ச் 2 முதல் 5 வரை மக்களவையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடத்த அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதன் முதல் நாளில் இருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தில்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 4 நாள்களாக முடங்கியது. 

இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடியது. அப்போது காங்கிரஸ் எம்பி-க்கள் மீது எடுக்கப்பட்ட இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி கோரிக்கை விடுத்தார். தயாநிதி மாறம் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இடைநீக்கம் நடவடிக்கைக்கான நியாயங்களை முன்வைத்தார்.

அப்போது பாஜக எம்பி கிரீட் பிரேம்ஜிபாய் சோலங்கி அவை வழிநடத்தினார். இந்த விவாதத்தின் முடிவில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு மார்ச் 2 முதல் 5 வரை மக்களவையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்யும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி ஹோலி பண்டிகைக்குப் பிறகு மார்ச் 11-இல்தான் மக்களவை மீண்டும் கூடுகிறது.

முன்னதாக, மக்களவையில் நேற்று (வியாழக்கிழமை) கரோனா வைரஸ் தொடர்பான விவாதத்தின்போது ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சியின் உறுப்பினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையான எதிர்வினையை ஆற்றினர். இதன் தொடர்ச்சியாக அவைத் தலைவர் மேசையில் இருந்த ஆவணங்களை பறித்துச் சென்று அதில் இருந்த காகிதங்களை வீசி எறிந்தனர்.

இதையடுத்து, அவை ஒழுங்குகளை மீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் எம்பி-க்கள் கௌரவ் கோகோய், டி.என். பிரதாபன், டீன் குரியகோஸ், மாணிக்கம் தாகூர், ராஜமோகன் உண்ணித்தான், பென்னி பெஹனான், குர்ஜீத் சிங் அவ்ஜலா ஆகிய 7 பேரை இடைநீக்கம் செய்வதாக அவையை வழிநடத்தி வந்த மீனாட்சி லேகி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.