காயமுற்ற தந்தையை சுமார் 1,200 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்துச் சென்ற மகள்!

ஊரடங்கு காரணமாக, பொது போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில்,  காயமுற்ற தனது தந்தையை தில்லியில் இருந்து பிகாருக்கு சுமார் 1,200 கி.மீ. தூரம் சைக்கிளிலே அழைத்துச் சென்றிருக்கிறார் மகள் ஜோதி.
காயமுற்ற தந்தையை சுமார் 1,200 கி.மீ. தூரம் சைக்கிளில் அழைத்துச் சென்ற மகள்!
Published on
Updated on
1 min read

ஊரடங்கு காரணமாக, பொதுப் போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில், காயமுற்ற தனது தந்தையை தில்லியில் இருந்து பிகாருக்கு சுமார் 1,200 கி.மீ. தூரம் சைக்கிளிலே அழைத்துச் சென்றிருக்கிறார் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஜோதி.

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக, வேலையிழந்து வறுமையில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி நூற்றுக்கணக்கான கிமீ தூரம் நடைபயணம் மேற்கொள்வதை கண்கூடாகக் காண்கிறோம். இதில், மனதை உருக்கும் சில சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

அந்த வகையில், தில்லியில் ரிக்ஷா ஓட்டி வந்த, வேலை இழந்த தனது தந்தைக்கு காலில் காயமுற, பணம் இல்லாததால் சுமார் 1,200 கிமீ சைக்கிளில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார் மகள் ஜோதி. 

இந்த நெடுந்தூர சவாலான பயணம் குறித்து 15 வயதே ஆன ஜோதி கூறுகையில், 'தில்லியில் என் தந்தை ரிக்ஷா ஓட்டும் வேலை செய்கிறார். தற்போது ஊரடங்கு காரணமாக ரிக்ஷா உரிமையாளரிடம் அதனை ஒப்படைக்க வேண்டியதாயிற்று. மேலும், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணமில்லை. அங்கு யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. அப்போதுதான் ஊருக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு லாரி டிரைவரிடம் பேசினோம். அவர், தர்பங்காவுக்கு அழைத்துச் செல்ல ரூ.6,000 கேட்டார். ஆனால், அவ்வளவு பணம் இல்லாததால் நாங்கள் ரூ. 500-க்கு ஒரு சைக்கிள் வாங்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். 

இந்த பயணத்தின்போது எனக்கு பயம் எதுவும் இல்லை. ஏனென்றால் என் தந்தையைப் போன்று நிறைய புலம் பெயர் தொழிலாளர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். விபத்து ஏதும் நடந்து விடுமோ என்ற கவலை மட்டுமே இருந்தது. ஆனால், பாதுகாப்பாக வீட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி என்றார். 

கடந்த மே 10 ஆம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள் மே 16 ஆம் தேதி தர்பங்காவை அடைந்துள்ளனர். 

மேலும் ஜோதி கூறும்போது, 'நாங்கள் தில்லியை விட்டு வெளியேறும்போது எங்களிடம் ரூ.600 மட்டுமே இருந்தது. இரவு நேரங்களில் பெட்ரோல் பங்குகளில் 2-3 மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு இரவு-பகலாக பயணம் செய்தோம். நாங்கள் பெரும்பாலும் நிவாரண முகாம்களில் கொடுக்கும்  உணவையே சாப்பிட்டோம்' என்று கூறினார். 

சொந்த ஊருக்கு சைக்கிளில் வந்த அவர்களை ஊர் மக்கள் ஆச்சரியமாக வரவேற்றனர். அவர்களுக்கு போதிய உணவு அளித்தனர். தொடர்ந்து, கரோனா அச்சம் காரணமாக அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும், பாதுகாப்பு கருதி ஜோதி மட்டும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com