மருத்துவமனைக்குச் செல்வோர் கவனத்துக்கு..

கரோனா தொற்றுப் பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக பலதரப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்த்து வந்தனர்.
மருத்துவமனைக்குச் செல்வோர் கவனத்துக்கு..
மருத்துவமனைக்குச் செல்வோர் கவனத்துக்கு..


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக பலதரப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதை தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு, தள்ளிப்போட்ட பல சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள நோயாளிகளும் முன்வந்துள்ளனர்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, பேரிடர் காலத்தில் முன்களத்தில் இருக்கும் மருத்துவமனைகள், பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் தயாராகி வருகின்றன. பெரும்பாலான மருத்துவமனைகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

தொற்றுநோய் துறை நிபுணர் மருத்துவர் அனிதா மேத்யூ இது பற்றி கூறுகையில், தற்போதும் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது பாதுகாப்பானதா அல்லது அபாயம் நிறைந்ததா என்ற அச்சத்திலேயே உள்ளதாகக் கூறுகிறார்.

எனவே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

கரோனா தொற்றுக்கு உள்ளாகாமல் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கிய நடவடிக்கை சமூக இடைவெளி. முகக்கவம் அணிந்து வெளியே செல்லுவதை வழக்கமாக்கிக் கொண்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உரிய மருத்துவத்தை உடனடியாக பெறுவதே சரியானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அவசர மருத்துவ சிகிச்சைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற வேண்டியதும், உயிர்காக்கும் விஷயமே. 

மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு, மருத்துவரை சந்திப்பதற்கான நேரத்தை மருத்துவமனையை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். 

முகக்கவசம் அணிந்திருப்பதை கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கையில் எப்போதும் கிருமிநாசியை வைத்துக் கொண்டு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி முடித்ததும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். வயதானவர்கள் கையுறைகளைப் பயன்படுத்தலாம். 

ஆனால் கையுறை அணிந்து கொண்டோம் என்று கவனக்குறைவாக அதை அப்படியே முகத்தைத் தொடுவது போன்றவற்றை செய்யக் கூடாது. 

குடிநீரை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லுங்கள்.

அவசியத் தேவை இருப்பின் மட்டும் கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள், நோயாளிகளுடன் உதவிக்குச் செல்வதை தவிர்த்து விடவும்.

மருத்துவமனைக்குச் செல்லும் போது சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. இல்லாவிடில், தனியாக ஆட்டோ அல்லது கார் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அதுவும் இல்லாவிட்டால், பொதுப் போக்குவரத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயன்படுத்துங்கள். பயன்படுத்தியதும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துங்கள்.

போக்குவரத்தின் போதும் பணப்பரிமாற்றத்தை தவிர்க்கப் பாருங்கள். இல்லையேல் சரியான பணத்தைக் கொடுக்க முயற்சியுங்கள். இதனால், மீதித் தொகை வாங்குவதைத் தவிர்த்துவிடலாம்.

மருத்துவமனையில் முழுக்க முழுக்க சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மருத்துவரை சந்திக்கும் முன்பும் சந்தித்தப் பிறகும் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். 

மருத்துவமனை ஊழியர்கள் கொடுக்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மருத்துவ அறிக்கை அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். நேரம் மற்றும் பயண விரயத்தைத் தவிருங்கள். 

மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். அவசரத்தில் எதையும் சொல்லாமல் வருவது, யோசிப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.

வால்வுகளுடன் இருக்கும் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம். துணியால் ஆன முகக்கவசங்களே போதுமானது.

மருத்துவமனையில் இருந்து வந்ததும், முகக்கவசங்களை சோப்புப் போட்டு துவைத்து, வெயிலில் உலர்த்துங்கள். ஆடைகளை கூடுமானவரையில் சுத்தமான சுடுநீரில் துவைத்துவிட்டு, சுடுநீரில் சோப்புப் போட்டு குளிப்பது நல்லது.

மேற்கண்ட வழிமுறைகளில் எது ஒன்றையும் அலட்சியப்படுத்த வேண்டாம். கரோனா பரவல் குறைந்துவிட்டதாக கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம். இந்த வழிமுறைகளை சரியாகப் பின்பற்றி மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சையை பெற்று நோயிலிருந்து குணமடைவதே சாலச்சிறந்தது. 

மருத்துவமனைக்குச் சென்றாலே கரோனா வந்து விடும் என்று அஞ்சாமல், மருத்துவமனைக்குச் சென்றாலும் கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்ற வழிமுறையைக் கடைபிடியுங்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com