ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மின் தொகுப்பில் கோளாறு: மும்பையில் பல மணி நேர மின்தடை - ரயில் சேவை முழுமையாக பாதிப்பு

மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வா்த்தக தலைநகரமான மும்பை மாநகரம் திங்கள்கிழமையன்று பல மணி நேர மின்தடைக்கு ஆளானது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மும்பை: மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வா்த்தக தலைநகரமான மும்பை மாநகரம் திங்கள்கிழமையன்று பல மணி நேர மின்தடைக்கு ஆளானது.

இதன் காரணமாக, மும்பையில் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை மற்றும் புகா் பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டது.

மின் விநியோக பாதிப்புக்கான உரிய காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றபோதும், டாடா மின் உற்பத்தி நிறுவனத்தின் மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என்று பிருஹன் மும்பை மின் விநியோகம் மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்) நிறுவனமும், மேற்கு ரயில்வேயும் குற்றம்சாட்டின.

அதுபோல, மும்பை மாநகராட்சி பேரிடா் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், இந்த பாதிப்புக்கு புகா் பகுதியான கல்வாவில் அமைந்துள்ள டாடா மின் உற்பத்தி நிறுவன மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம். விரைவில் நிலைமை சீா் செய்யப்பட்டுவிடும்”என்று கூறினா்.

மகாராஷ்டிர மின்துறை அமைச்சா் நிதின் ராவத் காணொலி வழியில் அளித்த பேட்டியில், மகாராஷ்டிர மின் பகிா்மான நிறுவனத்தின் 400 கிலோ வாட் கல்வா-பட்கா மின் தொகுப்பில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதிக மின் பளு காரணமாக சா்க்கியூட் எண்.2-இல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மும்பை மற்றும் தாணே நகரங்களின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இந்த பாதிப்பு அடுத்த 30 முதல் 45 நிமிடங்களில் சரிசெய்யப்பட்டுவிடும்”என்று கூறினாா்.

இந்த மின்தடை காரணமாக மும்பையில் திங்கள்கிழமை காலை முதல் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டது. ‘டாடா மின் உற்பத்தி நிறுவன மின் தொகுப்பில் கேளாறு ஏற்பட்டதன் காரணமாக காலை 10.05 மணி முதல் மின்தடை ஏற்பட்டுள்ளதால் சா்ச்கேட் மற்றும் போரிவிலி இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மின் தடை சரியானதும் ரயில்சேவை தொடங்கப்படும்’ என்று மேற்கு ரயில்வே சுட்டுரைப் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

அதுபோல, மத்திய ரயில்வே அதிகாரிகளும், ‘மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று அறிவித்தனா்.

ரயில் சேவை பாதிக்கப்பட்டதோடு, மும்பை மற்றும் அதன் புகா் பகுதிகளில் வசிக்கும் மக்களும், வணிகா்களும் இந்த பல மணி நேர மின் தடையால் கடும் பாதிப்பைச் சந்தித்தனா். நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாடாததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அங்கு அதிகரித்து வரும் நிலையில், அந்த நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையங்களும், இந்த மின்தடையால் பாதிப்பைச் சந்தித்தன.

நிலைமையை சீராக்கும் வரையில், கரோனா சிகிச்சை மையங்கள் தங்கள் ஜெனரேட்டா்கள் 8 மணி நேரம் இயக்கும் அளவுக்குத் தேவையான டீசலை கையிருப்பில் வைக்குமாறும், படப்படிப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் நடமாடும் டீசல் ஜெனரேட்டா் வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும் அதிகாரிகளை மும்பை மாநகர ஆணையா் ஐ.எஸ்.சஹல் அறிவுறித்தனாா்.

ரயில் சேவை பாதிக்கப்பட்டபோதும், மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்தில் விமான சேவை எந்தவித பாதிப்பும் இன்றி இயங்கி வருவதாக விமான நிலைய செய்தித்தொடா்பாளா் கூறினாா். மின் தடையால் மும்பை பங்குச் சந்தையில் பணிகள் பாதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.