இரு மேஜர்கள் உள்பட 10 இந்திய ராணுவ வீரர்களை விடுவித்தது சீனா

சீனா பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு மேஜர்கள் உள்பட 10 இந்திய ராணுவ வீரர்களை விடுவித்தது சீனா


லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய -  சீன ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், சீனா பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மூன்று நாள்களாக இந்திய - சீன ராணுவ அளவில் நடத்தப்பட்ட மிக முக்கிய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரண்டு மேஜர் ஜெனரல்கள் உள்பட 10 இந்திய ராணுவ வீரர்களை வியாழக்கிழமை மாலை சீனா விடுத்திருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மேஜர்  ஜெனரல்கள் மட்டத்தில் தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை ஏற்று, எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தும் வகையில் 10 இந்திய ராணுவ வீரர்களை சீனா விடுவித்திருப்பதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் பத்து பேர் விடுவிக்கப்பட்டிருப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவப் படைகள் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய வீரா்கள் பலா் காணாமல் போனதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் மோதலின்போது இந்திய வீரா்கள் எவரும் காணாமல் போகவில்லை என இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவாவும் உறுதிப்படுத்தினாா்.

மேலும், இந்திய ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவமும் தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com