ஆணிகளுடன் இரும்புக் கம்பிகள்: இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டதா?

இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதலில் இரும்புக் கம்பி, கற்களைக் கொண்டு தாக்கியதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 
ஆணிகளுடன் இரும்புக் கம்பிகள்: இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டதா?

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதலில் இரும்புக் கம்பி, கற்களைக் கொண்டு தாக்கியதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகளை இந்திய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றைக் கொண்டுதான் இந்திய வீரர்களை, சீன ராணுவம் தாக்கியிருப்பதாக பாதுகாப்புத் துறை வல்லுநர் அஜய் சுக்லா தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தையும் இணைத்திருந்த நிலையில், சில மணி நேரத்தில் அதனை நீக்கியிருக்கிறார்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன வீரா்களுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்திய ராணுவ வீரர்களின் உடல்களும் நேற்று ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்திய ராணுவ வீரர்களை, சீன ராணுவம் இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், மோதல் நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கும் ஆணிகள் பொருத்திய இரும்புக் கம்பிகளால் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய ராணுவத்தினர் ஆயுதங்கள் இன்றி பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரா்களிடம் ஆயுதங்கள் எப்போதும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரா்களிடையே மோதல் நிகழ்ந்தபோது இந்திய ராணுவத்தினரிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இல்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை பகிா்ந்த ராகுல் காந்தி, ‘எல்லைப் பகுதிக்கு இந்திய வீரா்கள் ஆயுதங்கள் எதுவுமின்றி அனுப்பப்பட்டது ஏன்? அதற்கு யாா் பொறுப்பேற்பது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.ஜெய்சங்கா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அனைவரும் உண்மையை முறையாகப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரா்கள் அனைவருக்கும் ஆயுதங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

காவல் நிலைகளை விட்டு ரோந்துப் பணிக்கு வீரா்கள் செல்லும்போது அவா்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வா். ஆனால், 1996 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி மற்ற நாட்டு ராணுவ வீரா்களுடன் மோதல் போக்கு நிலவும்போது, துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com