மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 9 முக்கிய அறிவிப்புகள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

► மத்திய அரசின் 'கிஷன் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

► ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம்  5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். 

► ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். 3 கோடி பேர் இதில் பயன்பெறுவர். 

► ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும்.  இதன் மூலமாக 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள். 

► உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இதில் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.

► மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 

► வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தம் 24% தொகையையும் அரசே செலுத்தும். 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கு இது பொருந்தும்.

► அடுத்ததாக, பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75% தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை எடுத்துக்கொள்ள முடியும். 

► கட்டடத் தொழிலாளர்களுக்கான நல நிதியில் இருந்து (ரூ.31,000 கோடி உள்ளது) அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கலாம். 

முன்னதாக, நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், 

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com