
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனா பாதித்து 105 பேர் பலியாகியுள்ளனர். இதில் 32 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இதனால், அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிரத்தில் 2,190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,948 ஆக உயர்ந்துள்ளது.
முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று இலக்க எண்ணில் பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் மட்டும் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1,097 பேர் பலியாகியுள்ளனர்.
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தற்போது மகாராஷ்டிரத்தில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதே போல பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலமும் 11.5 நாள்களில் இருந்து 14.7 நாள்களாக அதிகரித்துள்ளது.