பாபா கா தாபா: விடியோ பதிவிட்டவர் மீது பணமோசடி புகார் அளித்த முதியவர்

தில்லியின் மால்வியா நகரில் முதிய தம்பதி நடத்தி வந்த உணவகத்தைப் பற்றிய தகவல்கள் யூ-டியூப் மூலம் வெளி உலகுக்கு வந்து, ஏராளமான உதவிகள் குவிந்த நிலையில், அந்த முதிய தம்பதியர் யூ-டியூப்பில் தங்களது விடியோவ
பாபா கா தாபா: விடியோ பதிவிட்டவர் மீது பணமோசடி புகார் அளித்த முதியவர்
பாபா கா தாபா: விடியோ பதிவிட்டவர் மீது பணமோசடி புகார் அளித்த முதியவர்
Published on
Updated on
2 min read

புது தில்லி: தில்லியின் மால்வியா நகரில் முதிய தம்பதி நடத்தி வந்த உணவகத்தைப் பற்றிய தகவல்கள் யூ-டியூப் மூலம் வெளி உலகுக்கு வந்து, ஏராளமான உதவிகள் குவிந்த நிலையில், அந்த முதிய தம்பதியர் யூ-டியூப்பில் தங்களது விடியோவை பதிவிட்ட நபர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

யூ-டியூப்பில் ஒரு சேனலை நடத்தி வரும் கௌரவ் வாசன், இந்த மாதத் துவக்கத்தில், மால்வியா நகரில் இயங்கி வரும் பாபா கா தாபா என்ற உணவகத்தையும், அதை நடத்தி வரும் முதிய தம்பதிகளைப் பற்றியும் ஒரு விடியோவை பதிவிட்டிருந்தார்.

கௌரவ் வாசன் வெளியிட்ட அந்த விடியோவில் சிறிய உணவகத்தில் யாரும் சாப்பிட வராததால் வருமானமின்றி முதியவர் அழுத விடியோ இணையத்தில் பரவிய நிலையில், அந்த முதிய தம்பதியின் கடையில் அடுத்த நாள்களில் நூற்றுக்கணக்கானவா்கள் திரண்டுச் சென்று உணவருந்தினா். பொதுமக்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளித்தனா்.

இந்த நிலையில், பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு வந்த லட்சக்கணக்கான நிதியுதவியை, கௌரவ் வாசனே முறைகேடு செய்து ஏமாற்றி தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் முதியவர் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோருக்கு, அவர் தனது வங்கி எண்ணைக் கொடுத்து, பணத்தை முறைகேடு செய்திருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அந்தப் புகாரினை அடுத்து, தனது வங்கி அறிக்கையை கௌரவ் வாசன் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், அது போலியானது என்றும், வரவு வைக்கப்பட்டத் தொகைகள் அடித்துத் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் பலரும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தில்லி மாளவியா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தா பிரசாத் (80). இவா் தனது மனைவி பதாமி தேவியுடன் (78) இணைந்து அப்பகுதியில் சுமாா் 30 ஆண்டு காலமாக ‘பாபா கா தாபா’ என்ற சிறிய உணவுக் கடை நடத்தி வருகிறாா்.

கரோனா பாதிப்பால், சமீப மாதங்களாக அவா்களது உணவுக் கடைக்கு வாடிக்கையாளா்கள் வரத்து குறைந்தது. நாளுக்கு நாள் யாருமே வராத சூழல் ஏற்பட, அவா்கள் வருமானத்துக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியது. தனது கஷ்ட நிலையைக் கூறி, அந்த முதியவா் அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த விடியோவை பாா்த்த கிரிக்கெட் வீரா் அஸ்வின், பாலிவுட் நடிகை சோனம் கபூா், காங்கிரஸ் தலைவா் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பலா் அந்த முதிய தம்பதிக்கு உதவி செய்ய முன்வந்தனா். இந்நிலையில், முதிய தம்பதியின் சிற்றுண்டி கடைக்கு ஆதரவு அளிக்கக் கோரி இணையத்தில் ‘பாபா கா தாபா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. அதைத் தொடா்ந்து சுற்றிலும் உள்ள தில்லி வாசிகள் பலா் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடையில் உணவருந்த குவிந்தனா். பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ‘பாபா கா தாபா’வில் வந்து சாப்பிடுவதுடன் அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனா்.

இது தொடா்பான செய்தியை பகிா்ந்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘இதுதான் தில்லிமக்களின் இதயம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.