இறந்த கரோனா நோயாளிக்கு முதல் முறையாக உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி

பெங்களூருவில் முதல் முறையாக கரோனாவால் இறந்தவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக இறந்த கரோனா நோயாளிக்கு உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி
முதல் முறையாக இறந்த கரோனா நோயாளிக்கு உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி

பெங்களூரு: கரோனா பாதித்து உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை மிக எச்சரிக்கையோடு கையாண்டு நல்லடக்கம் செய்துவந்த நிலையில், பெங்களூருவில் முதல் முறையாக கரோனாவால் இறந்தவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்து பலியான ஒருவரின் உடல் 15 மணி நேரத்துக்குப் பின், தடயவியல் துறை நிபுணர் மருத்துவர் தினேஷ் ராவ், உடற்கூராய்வு செய்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர் ராவ், கரோனா பாதித்து உயிரிழந்த 60 வயது முதியவரின் உடலை கடந்த புதன்கிழமை உடற்கூராய்வு செய்தார். இதுவரை கரோனா பாதித்தவர்களின் உடல்களை பாதுகாப்பான பைகளில் போட்டு கூடுமான அளவுக்கு விரைவாக நல்லடக்கம் செய்து வந்த நிலையில், கரோனா தொற்று ஒரு மனிதனின் உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை கண்டறியும் வகையில் உடற்கூராய்வு செய்து, பல அதிர்ச்சிகரமான தகவலை கண்டறிந்துள்ளார் மருத்துவர் தினேஷ் ராவ்.

இவர் தன்னந்தனியாக செய்த உடற்கூராய்வில் தெரியவந்திருக்கும் பல முக்கிய விஷயங்களில் மிகக் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், உயிரிழந்த கரோனா நோயாளியின் கழுத்து, முகம், தோல் பகுதிகளில் கரோனா தொற்று இல்லை. அவ்வளவு ஏன், அவர்களது உள்ளுறுப்புகளில் கூட நுரையீரல், மூச்சுக்குழாய் பகுதிகளில் கூட கரோனா தொற்று இல்லை. இப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எங்குமே கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அந்த நபரின் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் கரோனா வைரஸ் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் என்பது, பஞ்சால் ஆன பந்து போல மென்மையாகக் காணப்படுவது வழக்கம், ஆனால், அந்த நபரின் நுரையீரல் தோலால் செய்யப்பட்ட பந்து போல கனமாக இருந்துள்ளது.

"நுரையீரல் என்றால் வழக்கமாக 600 - 700 கிராம்தான் இருக்கும், ஆனால் கரோனா நோயாளியின் நுரையீரல் மட்டும் 2.1 கிலோ இருந்தது. தொடும் போது மென்மையாக இருக்கவில்லை, மிகக் கடினமாக இருந்தது, ஆங்காங்கே ரத்தத் திட்டுக்கள் காணப்பட்டன. அதைப் பார்க்கும் போது, கரோனா வைஸ் இந்த நுரையீரலை அப்படி என்னதான் செய்திருக்கும்? என்று நினைக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது" என்கிறார் ராவ். கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி அந்த நோயாளி 14 நாள்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் பலியாகியுள்ளார்.

இந்த உடற்கூராய்வு மூலமாக நமக்கு ஒரு மிக முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது, கரோனா வைரஸ் என்பது, உலகத்தின் பிற நாடுகளில் இருப்பதைப் போல அல்லாமல் இந்தியாவில் வேறு வகையில் மக்களை பாதிக்கிறது. அதாவது, அதன் பாதிப்பு இந்திய மக்களிடையே வேறாக உள்ளது, அது நுரையீரலை தாக்குவது இத்தாலி அல்லது உலகின் வேறு நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் வேறுபட்டு உள்ளது என்று ராவ் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தொடுவதற்கு அனுமதிக்கலாமா என்ற கேள்விக்கு, இறந்த நபரின் உடலில் கரோனா வைரஸ் இறந்துவிட்டதைப் போலக் காணப்பட்டாலும், இறந்தவரின் உடலிலிருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் மேலதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்கிறார்.

ஜமைகா, எடின்பர்க் மற்றும் பிரிட்டனில் தடயவியல் துறையில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கும் மருத்துவர் ராவ், பல்வேறு நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு தடயவியல் பரிசோதனை மிக முக்கியப் பங்காற்றும் என்றார்.

பிளேக், மலேரியா, எய்ட்ஸ், எபோலா உள்ளிட்ட வைரஸ் பரவல் ஏற்படும் போது, அவை மனித உறுப்புகளை எந்த வகையில் எல்லாம் பாதிக்கிறது என்பதை உடற்கூராய்வுகள் மூலம் அறிந்து கொள்ளும்போதுதான், அந்த வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்க முடிந்தது.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், மருத்துவர் ராவ், மிகப் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்ட தற்பாதுகாப்புக் கவசத்தை அணிந்து கொண்டு தன்னந்தனி ஆளாக இந்த உடற்கூராய்வை செய்து முடித்துள்ளார். இதற்குக் காரணம், அவருடன் இணைந்து உடற்கூராய்வு செய்ய வேறெந்த நபரும் முன்வராததுதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com