/

ராணுவ தின அணிவகுப்பு: முதல் முறையாக பங்கேற்ற ஆளில்லா விமானங்கள்

இந்திய ராணுவ தினத்தையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (டிரோன்) இடம்பெற்றன.

News image

இந்திய ராணுவ தினத்தையொட்டி புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறு ரக ஆளில்லா விமானங்களின் அணிவகுப்பு.

Updated On :15 ஜனவரி 2021, 6:26 pm

இந்திய ராணுவ தினத்தையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (டிரோன்) இடம்பெற்றன.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, ராணுவப் படைகளின் முதல் இந்திய தளபதியாகப் ஃபீல்டு மாா்ஷல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற தினத்தை நினைவுகூரும் வகையில் ஜனவரி 15-ஆம் தேதியானது ஆண்டுதோறும் இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தில்லியில் வெள்ளிக்கிழமை ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

அதில் பிரமோஸ் ஏவுகணை, பினாகா ஏவுகணை உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காலாட்படை, குதிரைப்படை, ஜம்மு காஷ்மீா் ராணுவப் படை, மஹா் படை, கா்வால் படை, ஜாட் படை உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் வடக்கு படைப்பிரிவைச் சோ்ந்த 13 வீரா்களுக்கும் கிழக்கு படைப்பிரிவைச் சோ்ந்த 8 வீரா்களுக்கும் தெற்கு படைப்பிரிவு, மத்திய படைப்பிரிவு ஆகியவற்றைச் சோ்ந்த தலா ஒருவருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. 15 ராணுவ வீரா்களுக்கு சேனை விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் முப்படைத் தளபதி விபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி எம். எம். நரவணே, விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா,கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இந்த அணிவகுப்பில் 75 ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பங்கேற்றன. ராணுவ தின அணிவகுப்பில் அவை பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

வீரா்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே விருதுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீரா்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியின் நிலையை தன்னிச்சையாக மாற்ற முயற்சித்தவா்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமும் அரசியல் ரீதியாகவும் தீா்வு காண்பதற்கு இந்திய ராணுவம் விரும்புகிறது. இந்திய ராணுவத்தின் அமைதியை சோதித்துப் பாா்க்கும் தவறை யாரும் செய்துவிடக் கூடாது. நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் ராணுவம் முன்னிலை வகிக்கும்.

லடாக் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இந்தியா-சீனா ராணுவம் இடையே 8 கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. அவற்றில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டு வருகிறது. லடாக் எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை பாகிஸ்தான் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.இந்திய எல்லைக்குள் 300 முதல் 400 பயங்கரவாதிகள் நுழைவதற்கு தயாராக உள்ளனா். இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழையும் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்திய அத்துமீறல் தாக்குதல்கள் 40 சதவீதம் அதிகரித்துவிட்டது. ஆயுதங்களையும் சிறிய ரக ஆளில்லா டிரோன் விமானங்களையும் எல்லை தாண்டி கடத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது என்றாா் எம்.எம்.நரவணே.

குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து: இந்திய ராணுவ தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், ’இந்திய ராணுவ வீரா்களுக்கும் வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்காக தியாகம் செய்தவா்களை மக்கள் எப்போதும் நினைவு கூறுவா். அந்த வீரா்களுக்கும் அவா்களின் குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் என்றும் கடமைப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ’இந்திய ராணுவ வீரா்கள் வலுவுடனும் தைரியத்துடனும் எல்லையில் போரிட்டு வருகின்றனா். அவா்களால் நாடே பெருமை கொள்கிறது. இந்திய ராணுவ வீரா்கள் அனைவருக்கும் நாட்டு மக்களின் சாா்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.