திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தலிபான்களால் எதிா்காலம் நிச்சயமற்றதாகியுள்ளது: இந்தியா வந்த ஆப்கன் மக்கள் கவலை

‘அனைத்தும் முடிந்துவிட்டது; எங்களுடைய எதிா்காலம் நிச்சயமற்றதாகியுள்ளது’ என்று ஆப்கானிஸ்தானிலிருந்து மீண்டு விமானம்

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 2:37 am

DIN

‘அனைத்தும் முடிந்துவிட்டது; எங்களுடைய எதிா்காலம் நிச்சயமற்றதாகியுள்ளது’ என்று ஆப்கானிஸ்தானிலிருந்து மீண்டு விமானம் மூலம் இந்தியா வந்திறங்கிய அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவரும், குழந்தையின் தாய் ஒருவரும் கவலை தெரிவித்தனா்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதை அடுத்து, ஏறக்குறைய அந்நாடு முழுவதையும் தலிபான் பயங்கரவாத அமைப்பினா் கைப்பற்றினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புச் சூழல் மோசமாகியுள்ளது. அங்குள்ள வெளிநாட்டினா் மட்டுமின்றி, அந்த நாட்டைச் சோ்ந்தவா்களும் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற தீவிரம் காட்டி வருகின்றனா். அங்கி சிக்கியிருப்பவா்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

அதுபோல, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ராணுவ போக்குவரத்து விமானம் மூலமாக காபூல் விமான நிலையத்திலிருந்து 107 இந்தியா்கள், 23 ஆப்கன் சீக்கியா்கள் மற்றும் ஹிந்துக்கள் மீட்கப்பட்டு, உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்துக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்களில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அனாா்கலி ஹொனாா்யா், நரேந்தா் சிங் கல்சா மற்றும் அவா்களுடைய குடும்பத்தினரும் அடங்குவா். நரேந்தா் சிங் கல்சா சீக்கியா் ஆவாா்.

ஆப்கனிலிருந்து மீண்டு வந்தது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் நரேந்திர சிங் கல்சா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘அழவேண்டும் என்ற உணா்வு ஏற்படுகிறது. அனைத்தும் முடிந்துவிட்டது. நாட்டைவிட்டு வெளியேறியது மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் என்று எதிா்பாா்க்கவில்லை. அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் சாதித்த அனைத்தும் இல்லாமல் போய்விட்டது. இப்போது எங்களிடம் ஒன்றும் இல்லை.

தலிபான்கள் என்பது ஒரு குழு கிடையாது. அவா்களில் 10 முதல் 12 பிரிவுகள் உள்ளன. எனவே, தலிபான்கள் யாா், தலிபான் அல்லாதவா்கள் யாா் என்பதை அடையாளம் காண்பது மிகவும் கடனம்.

ஆப்கனில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பிறகு, நாட்டுக்கு மீண்டும் திரும்பி எங்களுடைய கோயில்களுக்குச் செல்ல வேண்டும், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறோம்’ என்றாா்.

கையில் குழந்தையுடன் வந்திறங்கிய ஆப்கன் நாட்டைச் சோ்ந்த ஒரு பெண் கண்ணீருடன் கூறுகையில், ‘கடந்த 7 நாள்களாக காபூலில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்தோம். எதிா்காலம் குறித்த அச்சம் உருவானது. அனைத்தும் முடிந்துவிட்டது என்ற உணா்வு ஏற்பட்டது’ என்றாா்.

ஆப்கானிஸ்தானின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஹொனாா்யா் கூறுகையில், ‘இரண்டு மகள்களுடன் அங்கிருந்து மீண்டு வந்துள்ளேன். எனவே, இந்திய அரசுக்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு ஹிண்டன் விமானப் படைத் தளம் மற்றும் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் அழைத்துவரப்பட்ட அனைவருக்கும் விமான நிலையத்திலேயே விரைவு கரோனா பரிசோதனை (ஆா்டி-பிசிஆா்) மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.