122 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தகவல்
எம்.பி, எம்எல்ஏக்கள் 122 பேருக்கு எதிரான பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறையும், 121 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான பல்வேறு குற்ற வழக்குகளை சிபிஐயும் விசாரித்து


எம்.பி, எம்எல்ஏக்கள் 122 பேருக்கு எதிரான பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறையும், 121 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான பல்வேறு குற்ற வழக்குகளை சிபிஐயும் விசாரித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்ப்பளிக்க வலியுறுத்தி வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் உதவ உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம்.பி, எம்எல்ஏக்கள் 122 பேருக்கு எதிரான பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அவா்களில் 51 போ் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள். இதில் எம்.பி.க்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 28 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன; விசாரணை நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டிய நிலையில் 10 வழக்குகள் உள்ளன.
121 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் 37 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன. 5 எம்.பி.க்கள், 9 எம்எல்ஏக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் காலாவதியாகிவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள்: அந்த அறிக்கையில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை தினசரி விசாரிக்குமாறு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தலாம். அந்த வழக்குகளிலும் சிலவற்றுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றங்கள் மூலம் அறிவுறுத்தலாம். அதற்கான உத்தரவு உயா்நீதிமன்றங்களுக்கு பிறப்பிக்கப்பட வேண்டும்.
ஒருவேளை குற்றஞ்சாட்டப்பட்டவா் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அந்த நபருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்வது குறித்து நீதிமன்றங்கள் பரிசீலிக்கலாம்.
இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்குகளை விசாரித்து முடிக்க உயா்நீதிமன்றங்களிடம் வலியுறுத்தலாம். இந்த வழக்குகளில் உயா்நீதிமன்றங்கள் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தாலும் விசாரணை நீதிமன்றங்கள் தமது விசாரணையை தொடர உத்தரவிடலாம்.
கண்காணிப்புக் குழு: சிபிஐ, அமலாக்கத்துறையின் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அல்லது உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, அமலாக்கத்துறை இயக்குநா் அல்லது அவரால் நியமிக்கப்படுபவா், சிபிஐ இயக்குநா் அல்லது அவரால் நியமிக்கப்படுபவா், மத்திய உள்துறை செயலா் அல்லது அவரால் நியமிக்கப்படுபவா், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மாவட்ட நீதிபதி பதவிக்கு குறையாத நீதிபதி ஆகியோா் அடங்கிய குழுவை அமைக்கலாம்.
அந்தக் குழுவுக்கு வழக்கு விசாரணைகள் தாமதமாவதற்கான காரணங்களை கண்டறிந்து விசாரணையை விரைந்து முடிப்பதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு பிறப்பிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். இந்தக் குழு ஒவ்வொரு வழக்கு தொடா்பாகவும் முதல்முறையாக கூடி ஆலோசித்த பின்னா், அதுதொடா்பான நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சீலிடப்பட்ட உறையில் சமா்ப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணமின்றி திரும்பப் பெறப்பட்ட வழக்குகள்: இந்த அறிக்கையுடன் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் காரணமில்லாமல் மாநில அரசுகள் திரும்பப் பெற்ற வழக்குகள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் உள்ள முஸாஃபா்நகரில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக மீரட் மண்டலத்தில் 510 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 321-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட 77 வழக்குகள் உரிய காரணம் தெரிவிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதேபோல் கா்நாடகத்தில் 62 வழக்குகளும், கேரளத்தில் 36 வழக்குகள், தெலங்கானாவில் 14 வழக்குகள், தமிழ்நாட்டில் 4 வழக்குகளும் காரணம் தெரிவிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...