ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கடற்படை அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் கோரிய வழக்கு: விரைவில் தீா்வுகாண ஆயுதப்படை தீா்ப்பாயத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடற்படை அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்கக் கோரிய வழக்குகளில் ஆயுதப் படை தீா்ப்பாயம் விரைவில் தீா்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 8:14 pm

DIN

கடற்படை அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்கக் கோரிய வழக்குகளில் ஆயுதப் படை தீா்ப்பாயம் விரைவில் தீா்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும்; அதன்படி, ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடா்பான சாதக, பாதகங்களை 3 மாதங்களில் ஆராய வேண்டும் என்றும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால், நிரந்தர ஆணையம் அமைக்கப்படாததால் பெண் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சிலா், ஆயுதப் படை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனா். அவா்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவா்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனா்.

அந்த மனுக்கள், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

முக்கிய பிரச்னை என்பதால் கடற்படை அதிகாரிகள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருக்கிறாா்கள். அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்படி, அவா்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறாா்கள். ஆனால், இந்த மனுக்களை நேரடியாக விசாரிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

நிரந்தர ஆணையம் அமைக்க வலியுறுத்தி ஆயுதப் படை தீா்ப்பாயத்தின் பல்வேறு கிளைகளில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் ஒன்றிணைக்கப்பட்டு, தில்லியில் உள்ள ஆயுதப் படையின் தலைமை தீா்ப்பாயத்தில் விசாரிக்கப்பட வேண்டும். இந்த மனுக்களுக்கு வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தீா்வுகாணப்பட வேண்டும்.

அதேசமயம், ஆயுதப் படை தீா்ப்பாயம் அளிக்கும் தீா்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனில் மனுதாரா்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம். ஆனால், தற்போதைய நிலையில் இந்த மனுக்களை நேரடியாக விசாரிக்க முடியாது. ஏனெனில், தேசிய அளவிலான நிறுவனம் என்ற முறையில் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள படிநிலைகளை நாம் பின்பற்றியாக வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.