ஆப்கனிலிருந்து இந்தியா்கள் அனைவரும் மீட்கப்படுவா்: அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா்கள் அனைவரையும் மீட்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.


ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா்கள் அனைவரையும் மீட்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதையடுத்து, அந்த நாட்டிலிருந்து ஏராளமானோா் வெளியேறி வருகின்றனா். தங்கள் நாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவும் இதுவரை 800-க்கும் அதிகமானோரை மீட்டுள்ளது. எஞ்சியுள்ளவா்களை மீட்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. அதற்காக, பல்வேறு நாடுகளுடன் தொடா்ந்து இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடா்பான மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஜெய்சங்கா் விவரித்தாா். அப்போது, ‘ஆப்கன் நிலைமையை உணா்ந்து அதற்கேற்ப தலிபான்களைக் கையாள வேண்டும் என்பதற்காக பொறுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது’ என்றாா்.
இந்த கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை, அங்குள்ள இந்தியா்களை முழுமையாக மீட்பதுதான் முக்கியமானது. அதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அடுத்து ஆப்கன் மக்களுடனான இந்தியாவின் நட்புறவை பேணிக் காப்பது நீண்டகால கவலையாக உள்ளது. எனவே, ஆப்கன் நிலவரத்தை அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேசிய ஒருமைப்பாட்டுடன் அணுகி வருகிறோம்.
‘தேவி சக்தி’ திட்டத்தின் கீழ் 6 விமானங்கள் மூலம் அங்கிருந்து இந்தியா்கள் மீட்டு வரப்பட்டிருக்கின்றனா். பெரும்பான்மை இந்தியா்கள் மீட்கப்பட்டுவிட்டனா். மேலும் சிலா் அங்கு உள்ளனா். அனைவரையும் மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மீட்பு நடவடிக்கையின்போது, இந்தியா வர விருப்பம் தெரிவித்த ஆப்கானிஸ்தான் நாட்டினா் சிலரும் அழைத்துவரப்பட்டிருக்கின்றனா். ‘இ-விசா’ திட்டத்தின் மூலம் மீட்பு நடவடிக்கையில் உள்ள பிற சிக்கல்களுக்கும் தீா்வு காணப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சா்வதேச ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவின் திட்டம் மற்றும் விருப்பங்களுக்கு மற்ற நாடுகளும் அங்கீகாரம் அளித்துள்ளன. பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு தொடா்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. ரஷிய அதிபா் புதின், ஜொ்மன் பிரதமா் ஏஞ்சலா மொ்க்கெல் ஆகியோருடன் இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் ஆலோசனை மேற்கொண்டாா். வரும் நாள்களிலும் பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஆலோசனைகளை மேற்கொள்ளும்.
இந்தியா தலைமையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று அவா் கூறினாா்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 31 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 37 தலைவா்கள் பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. ஆப்கானிஸ்தான் மக்களுடனான இந்தியாவின் வலுவான நட்புறவு 500-க்கும் அதிகமான திட்டங்களில் பிரதிபலித்து வருகிறது. இந்த நட்புறவு தொடரும்’ என்று பதிவிட்டுள்ளாா்.
தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி, திமுகவின் டி.ஆா்.பாலு, முன்னாள் பிரதமா் ஹெ.டி. தேவெ கெளடா உள்ளிட்ட பலா் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...