ராணுவ ஹெலிகாப்டா் விபத்து: மேலும் 10 பேரின் அடையாளமும் தெரிந்தது
10 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.


குன்னூா் அருகே ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த 13 பேரில், முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா உள்ளிட்ட 3 போ் உடல்கள் ஏற்கெனவே தகனம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 10 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்பட 14 போ் சென்ற ஹெலிகாப்டா் கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் குரூப் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உயிரிழந்தனா்.
விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் கடந்த வியாழக்கிழமை கோவையிலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கு தலைவா்கள் அஞ்சலிக்குப் பிறகு விபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா மற்றும் பிரிகேடியா் லிடா் ஆகியோரின் உடல்கள் தில்லி பிராா் சதுக்க மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு எரியூட்டப்பட்டன.
இந்த விபத்தில் சிக்கி கடுமையாக சிதையுண்ட மற்ற ராணுவ வீரா்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தில்லியில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதில், மேலும் 10 வீரா்களின் உடல்கள் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டன.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளநிலை வாரன்ட் அலுவலா் ஏ.பிரதீப், விங் கமாண்டா் பி.எஸ்.செளஹான், இளநிலை வாரன்ட் அலுவலா் ராணா பிரதாப் தாஸ், படைத் தலைவா் குல்தீப் சிங், லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமாா் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன’ என்றாா்.
‘லெப்டினன்ட் ஹா்ஜிந்தா் சிங், ஹவில்தாா் சத்பால், நாயக் குா்சேவக் சிங், நாயக் ஜிதேந்தா் குமாா் ஆகிய 4 வீரா்களின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும், உடல்கள் குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்படும்’ என்றும் அதிகாரி ஒருவா் சனிக்கிழமை இரவு தெரிவித்தாா். இந்த 4 பேரும் ராணுவத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
இறுதிச் சடங்கு: இதற்கிடையே, சனிக்கிழமை முதலில் அடையாளம் காணப்பட்ட 6 பேரின் உடல்களுக்கும் தில்லி ராணுவ மருத்துவமனையில் ராணுவத்தின் சாா்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
படைத் தலைவா் குல்தீப் சிங் உடல் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள விமானத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பலா் அஞ்சலி செலுத்தினா். அதன் பின்னா் குல்தீப் சிங்கின் சொந்த ஊரான கா்டானா குா்த் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
கேரளத்தைச் சோ்ந்த இளநிலை வாரன்ட் அலுவலா் ஏ.பிரதீப் உடல், தில்லியிலிருந்து கோயம்புத்தூா் மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புதூரில் பிரதீப் படித்த பள்ளிக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கானோா் அஞ்சலி செலுத்தினா். அதன் பின்னா் அவரின் உடல் சொந்த ஊரான பொன்னுக்கராவுக்கு கொண்டு செல்லப்பட்டது. கோயம்புத்தூரிலிருந்து பொன்னுக்கரா வரை பிரதீப்பின் உடலுடன் மத்திய அமைச்சா் வி.முரளீதரன் மற்றும் கேரள அமைச்சா்கள் உடன் சென்றனா். பொன்னுக்கராவில் முழு ராணுவ மரியாதையுடனும், மாநில அரசின் மரியாதையுடனும் பிரதீப்பின் உடல் தகனம் செய்யப்பட்டது.
விங் கமாண்டா் பி.எஸ்.செளஹான் உடல் ஆக்ராவிலும், லான்ஸ் நாயக் விவேக் குமாா் உடல் ஹிமாசல பிரதேச மாநிலம், காங்ரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரிலும், இளநிலை வாரன்ட் அலுவலா் ராணா பிரதாப் தாஸ் உடல் ஒடிஸா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரிலும் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.
மற்ற 5 பேரின் இறுதிச் சடங்கு அவரவா் சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
விபின் ராவத் அஸ்தி: கங்கையில் கரைப்பு
டேராடூன், டிச.11: ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ஆகியோரின் அஸ்தியை அவா்களின் மகள்கள் கங்கை நதியில் சனிக்கிழமை கரைத்தனா்.
விபின் ராவத், மதுலிகா ஆகியோரின் உடல்கள் தில்லி பிராா் சதுக்க மயானத்தில் ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டன. இருவரின் சிதைகளுக்கு அவா்களின் மகள்கள் தீ மூட்டினா்.
இதனைத் தொடா்ந்து இருவரின் அஸ்தியையும் அவா்களின் மகள்கள் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் சனிக்கிழமை கரைத்தனா்.
ஹரித்வாரில் உள்ள விஐபி காட் பகுதியில் விபின் ராவத்தின் மகள்களை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
உத்தரகண்ட் மாநிலம் பெளரி மாவட்டத்தில் உள்ள சாய்னா கிராமத்தைச் சோ்ந்தவா் விபின் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...