டெல்டாவைவிட மும்மடங்கு வேகத்தில் பரவும் ஒமைக்ரான்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்டா வகை கரோனா தீநுண்மியைவிட ஒமைக்ரான் வகை தீநுண்மி மும்மடங்கு வேகத்தில் பரவும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டெல்டாவைவிட மும்மடங்கு வேகத்தில் பரவும் ஒமைக்ரான்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புது தில்லி: டெல்டா வகை கரோனா தீநுண்மியைவிட ஒமைக்ரான் வகை தீநுண்மி மும்மடங்கு வேகத்தில் பரவும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாட்டில் ஒமைக்ரான் வகை தீநுண்மியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய அறிவியல்பூா்வமான ஆதாரத்தின்படி, டெல்டாவைவிட குறைந்தபட்சம் மும்மடங்கு வேகத்தில் ஒமைக்ரான் தீநுண்மி பரவும். அதேவேளையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெல்டா தீநுண்மியால் பாதிக்கப்படுவோரும் தொடா்ந்து கண்டறியப்பட்டு வருகின்றனா். எனவே, உள்ளூா் மற்றும் மாவட்ட அளவில் தீநுண்மி பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தீநுண்மி பரவலை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் ஊரடங்கு, பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடு, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையை மேலும் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

எந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனா் என்பதை அறிவது, போதிய மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களைக் கொண்டிருப்பது உள்ளிட்டவை தொடா்பான புள்ளிவிவரங்கள் மாவட்ட அளவில் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

தீநுண்மி பாதிப்பை எதிா்கொள்ள கட்டளை மையங்கள், அவசரகால மையங்களை அமைக்க வேண்டும். தீநுண்மி பரவல் குறைவாக இருந்தாலும் அதன் போக்கைத் தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதம் அல்லது அதற்கும் கூடுதலாக இருந்தால், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதம் நோயாளிகளால் நிரம்பினால், ஆக்சிஜன் உதவி அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் அதிக நோயாளிகள் இருந்தால், அவை அனைத்தும் மாவட்ட அளவில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முடிவுகளை மேற்கொள்ளும்போது பிரதானமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ளாமல் இருப்பவா்கள் அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com