படுக்கையில் படுத்தபடி விசாரணைக்கு ஆஜரான முன்னாள் டிஜிபி; எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
தனக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் காவல்துறை தலைவர் நீதிபதியிடம் கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் சுமேத் சிங் சைனி, இணையம் வழியாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்கு படுக்கையில் படுத்தபடி ஆஜரானது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான சைனி, தனது போக்கில் கவனமாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் எச்சிரிக்கை விடுத்துள்ளது.
திங்கள்கிழமையன்று, இணையம் வழியாக நடைபெற்ற விசாரணையின்போது பேசிய சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், சைனி தனது போக்கில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்ற நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தனக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சைனி நீதிபதியிடம் கூறினார். ஆனால், அதற்கான மருத்துவ சான்றிதழை அவர் சமர்பிக்கவில்லை.
பின்னர், இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பித்த நீதிபதி, "முதல் குற்றவாளியான சுமேத் குமார் சைனி, இணையம் மூலம் நடைபெற்ற விசாரணையில் இணைந்தார். எனினும், அவர் படுக்கையில் படுத்தபடியே விசாரணையில் பங்கேற்றது கருத்தில் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
இருப்பினும், இது தொடர்பான மருத்துவச் சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை அல்லது பதிவு செய்யப்படவில்லை. இனி, முதல் குற்றவாளி இணைய விசாரணை மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, எதிர்காலத்தில் தனது நடத்தையில் கவனமாக இருக்கவும், நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு, லூதியானாவில் வினோத் குமார், அசோக் குமார் மற்றும் அவர்களது ஓட்டுநர் முக்தியார் சிங் ஆகிய 3 பேரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சுமேத் சைனி மற்றும் மூன்று போலீஸார் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல்துறை அலுவலர்களான சுக் மொஹிந்தர் சிங் சந்து, பரம்ஜித் சிங் மற்றும் பல்பீர் சந்த் திவாரி ஆகியோருடன் சுமத் சைனி சதித்திட்டம் தீட்டியதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
ஆட்டோமொபைல் ஒப்பந்தத்தில் எழுந்த பிரச்னையில் தனிப்பட்ட பகை காரணமாக சுமத் சைனி, இந்த செயலில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பு கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...