பிரதமர் மோடியின் கார்: உண்மையிலேயே விலை என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தற்போது பயன்படுத்தும் மெர்சிடஸ் பென்ஸ் காரின் உண்மையான மதிப்புதான் என்ன?
மெர்சிடஸ் மேபேக் எஸ்650
மெர்சிடஸ் மேபேக் எஸ்650

மத்திய அரசு வட்டாரங்களே விளக்கம் தரும் அளவுக்கு சர்ச்சைக்குள்ளான, தற்போது பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தும் மெர்சிடஸ் பென்ஸ் காரின் உண்மையான மதிப்புதான் என்ன? 

இப்போதெல்லாம் உலகின் தலைவர்கள் பலரும் தங்கள் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். அதற்காகவே தங்கும் வீடுகள், உணவு, பயணம் அனைத்தும் பல கட்ட சோதனைகளுக்குப் பின்னே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த விதத்தில் மற்றொரு பாதுகாப்பு அம்சம் அவர்கள் பயன்படுத்தும் கார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பழைய காருக்குப் பதிலாகத் தற்போது அதி நவீன பாதுகாப்பு வசதியுடன் கூடிய புதிய மெர்சிடஸ் மேபெக் எஸ் 650 ரக காரைப் பயன்படுத்தி வருகிறார்.

இந்தக் காரின் மதிப்பு ரூ. 12 கோடி என ஊடகங்களில் தகவல்கள் பரபரத்த நிலையில் அது தவறான தகவல் என்றும் குறிப்பிட்ட தொகையிலிருந்து 3-ல் ஒரு பங்குதான் உண்மையான விலை, தேவையில்லாமல் ஊடகங்கள் மிகைப்படுத்திக் கூறுகிறார்கள் என்றும் - அதிகாரப்பூர்வமாக அல்லாமல் - மத்திய அரசு வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. அப்படியானால், பிரதமரின் புதிய காரின் விலை ரூ. 4 கோடிதானா? 

மெர்சிடஸ் மேபெக் எஸ்650

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவான மேபெக் எஸ்650 கார் தானியங்கி கியர் வகையில் இயங்கக்கூடிய 5980-சிசி அளவு கொண்ட பெட்ரோல் வாகனம். லிட்டருக்கு 7.09 கி.மீ. வரை செல்லக் கூடிய  இந்தக் காரின் அதிகபட்ச பாதுகாப்பு அம்சமே பிரேக் சிஸ்டம் மற்றும் ஏர் பேக்தான். மேலும், 80 கிமீ-க்கும் மேலான வேகத்தில் சென்றால் நம்மை எச்சரிக்க ‘கிகி’ ஒலி அவ்வளவுதான். ஆனால்,  விற்பனை விலை ரூ. 2.79 கோடி!

மோடியின் மெர்சிடஸ் மேபெக் எஸ்650

ஆனால், இந்த மெர்சிடஸ் மேபெக் எஸ்650 காரை பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக எப்படியெல்லாம்  மாற்றியமைத்துள்ளார்கள்?

* வி-ஆர் 10 என்கிற உச்சகட்ட பாதுகாப்பு அம்சத்துடன் இந்தக் காரை உருவாக்கியிருக்கிறார்கள். இதனால், காரின் அருகே 2 மீட்டர் இடைவெளியில் 15 கிலோ அளவுள்ள வெடிகுண்டு வெடித்தாலும் சிறிய சேதாரம்கூட ஏற்படாது. மேலும், காரின் கண்ணாடிகள் தோட்டாக்கள் துளைக்காத வகையில் பாலிகார்பனேட் பூச்சால் பூசப்பட்டுள்ளது.

* இந்த காரின் டயர்கள் அனைத்தும் வழக்கமாக காருடன் வருபவை அல்ல. மோடிக்காகப் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டவை. சாலையில் உடனடியாக 160 கி.மீ. வேகத்தை எட்டக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டவை.

* கார் எதன் மீதாவது மோதினாலோ அல்லது தாக்குதல் ஏற்பட்டாலோ தானாகவே எரிபொருள் தொட்டி உறுதியாக மூடிக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏஎச்-64 அப்பாச்செ ஹெலிகாப்டர்கள் மட்டும் பயன்படுத்தும் இந்த அம்சம் போயிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

* மசாஜ் இருக்கைகள்

சாதாரண சொகுசு மெர்சிடஸை பாதுகாப்பு காரணத்திற்காக மாற்றியமைத்து, பல அம்சங்களைக் கொண்டு உருவான இந்தக் காரின் ஒட்டுமொத்த விலை கண்டிப்பாக ரூ. 12 கோடியைத் தாண்டும் என வாகன உற்பத்தித் துறை வல்லுனர்கள் தெரிவித்துவருகிற நிலையில் மத்திய அரசு வட்டாரம் எதனால் இந்தக் காரின் விலை ரூ.4 கோடிக்கும் குறைவானது என தெரிவிக்க வேண்டும்? வாகனத் துறை சார்ந்தவர்கள் நம்பாத போது சாமானியர்கள் மட்டும்  நம்ப வேண்டும் என ஏன் அரசு விரும்புகிறது? இதனால், விலை பற்றிய கருத்தில் உண்மையை மறைத்ததுமில்லாமல் சர்ச்சையைக் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ரோல்ஸ் ராய்ஸும் அம்பாசடர்களும்

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு கார்களின் மீது அபரிமிதமான பிரியம் கொண்டவர். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் டிரிடினி கல்லூரியில் அவர் படித்த காலத்தில் எந்த வாசல்வழி வெளியே வருவார் என்று தெரியாததால் 4 வாசல்களிலும் கார்கள் காத்திருக்கும் என்று சொல்வார்கள். பிரதமரானதும் அவர் பயன்படுத்தியது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார். இந்த காரை இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மௌண்ட் பேட்டன் பரிசாக அளித்திருந்தார். பல ஆண்டுகள் வரை இதே காரைத்தான் அவர் பயன்படுத்தினார்.

பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி தொடக்கத்தில், புகழ்பெற்ற இந்தியத் தயாரிப்பான மாருதி சுஸுகி எஸ்டீம்  காரைப் பயன்படுத்தினார். பின்னாளில் ரேஞ்ச் ரோவருக்கு மாறினார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் கார்களாக அணிவகுத்து வந்துகொண்டிருந்த காலத்தில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவோ நம்ம ஊர் அம்பாசடர் காரைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்தபோது, பிரதமராகப் பதவியேற்ற அடல் பிஹாரி வாஜ்பாய்கூட அம்பாசடர் காரைத்தான் பயன்படுத்தினார். பின்னாளில் பாதுகாப்பு கருதி பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காருக்கு மாறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் - பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரைப் பயன்படுத்தினார்.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டில்  பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ரேஞ்ச் ரோவர், டோடோடா, லாண்ட் க்ரூய்சர், தற்போது மெர்சிடஸ் மேபேக் எஸ்650, அனைத்து எக்ஸ்ட்ரா பாதுகாப்பு வசதிகளுடன்! உண்மையான மதிப்பு - அரசு சொன்னால் மட்டும்தான் தெரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com