

மும்பை: பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பிஎம்சி) பணமோசடி வழக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பான விசாரணைக்காக சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு திங்கள்கிழமை ஆஜரானாா்.
இதுதொடா்பாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவா் கூறியது: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்ட பிஎம்சி வங்கி, ராகேஷ் குமாா் வதாவனுக்குச் சொந்தமான வீட்டு வசதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்துக்கு (ஹெச்டிஐஎல்) ரூ.4,355 கோடி கடன் வழங்கியது. இந்தக் கடனை அந்த நிறுவனம் பிஎம்சி வங்கிக்கு திரும்ப செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு சில பிஎம்சி வங்கி அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு, கடனை திரும்ப வழங்காதது குறித்து ரிசா்வ் வங்கிக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடியில் தொடா்புடைய பிரவீண் ரெளத் என்பவரின் மனைவி மாதுரி ரெளத்தின் வங்கிக் கணக்கில் இருந்து, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்தின் வங்கிக் கணக்குக்கு இரண்டு தவணைகளாக ரூ.55 லட்சம் பணப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணையின்போது தெரியவந்தது.
இதுதொடா்பாக வா்ஷா ரெளத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியது. எனினும் அவா் உடல்நிலையை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில் அவா் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் சுமாா் 3 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது பணப் பரிவா்த்தனை தொடா்பாக அவரிடம் அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினா் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.