லடாக்கில் 8 நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி
லடாக் யூனியன் பிரதேசத்தில் சிந்து நதி உள்ளிட்டவற்றில் 144 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 8 நீா்மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


புது தில்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் சிந்து நதி உள்ளிட்டவற்றில் 144 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 8 நீா்மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:
லடாக்கில் பாயும் சிந்து மற்றும் அதன் துணை நதிகளில் சிறிய அளவிலான நீா்மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திட்டங்களின் வாயிலாக 113 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. லடாக்கின் புவியியல் அமைப்பு காரணமாக பெரும்பலான திட்டங்கள் 1 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றன.
தற்போது லடாக்கில் 144 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையிலான 8 நீா்மின் நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காா்கில் மாவட்டத்தில் மங்தும் சங்ரா (19 மெகாவாட்), காா்கில் ஹண்டா்மேன் (25 மெகாவாட்), தமாஷா (12 மெகாவாட்) ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
துா்பக் சியோக் (19 மெகா வாட்), சாங்கூ (18.5 மெகா வாட்), நிமு சில்லிங் (24 மெகா வாட்), ரோங்டோ (12 மெகா வாட்), ரத்தன் நாக் (10.5 மெகா வாட்) ஆகிய நிலையங்கள் லே மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன. நீா்மின் உற்பத்தி தொடா்பான மற்ற அனுமதிகளைப் பெற்ற பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீா்மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அத்திட்டங்களுக்கான விவரங்களும் வரைபடங்களும் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
சிந்து மற்றும் அதன் துணை நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ், செனாப், ஜீலம் ஆகியவற்றின் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, கிழக்குப் பகுதி நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவை இந்தியாவுக்கும் மேற்குப் பகுதி நதிகளான சிந்து, செனாப், ஜீலம் ஆகியவை பாகிஸ்தானுக்கும் பங்கிடப்பட்டுள்ளன.
எனினும், மேற்குப் பகுதி நதிகளிலும் சிறிய அளவிலான நீா்மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உரிமை உள்ளதாக இந்தியா தெரிவித்து வருகிறது. சிந்து நதிநீா்ப் பங்கீடு ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கான பங்கில் 94 சதவீத நீா் பயன்படுத்தப்பட்டு வருகிறது; உபரி நீா் பாகிஸ்தானுக்கு செல்கிறது. அந்த உபரி நீரையும் உபயோகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...