விநாயகர் கோயில் கட்டிய கிறிஸ்துவ தொழிலதிபர்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்துவ தொழிலதிபர் ஒருவர் விநாயகர் கோயில் கட்டியிருக்கும் சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயில்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்துவ தொழிலதிபர் ஒருவர் விநாயகர் கோயில் கட்டியிருக்கும் சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஷிர்வா என்ற நகரைச் சேர்ந்தவர் கேப்ரியல் நசரத்(77). தொழிலதிபரான இவர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோயிலைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலை அவர் ரூ.2 கோடி செலவில், தனது பெற்றோர் ஃபேபியன் செபஸ்டியன் நசரத் மற்றும் சபீனா நசரத் ஆகியோரின் நினைவாக கட்டியுள்ளார்.

கோயில் கட்டியதன் காரணம் குறித்து கேப்ரியல் தெரிவித்ததாவது, ''நான் கடந்த 60 வருடங்களாக, கடவுள் சித்தி விநாயகரின் ஆசி பெற்றவனாக உணர்கிறேன். நான் கடந்த 1959 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, வேலை தேடி மும்பை வந்தேன். அப்போது எனக்கு வயது 14 தான். மும்பையில் நான் பிரபாதேவி பகுதியில் தங்கியிருந்தேன். அதன் அருகே புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது. நான் அங்கே சென்று தினமும் கடவுளை தரிசிப்பேன்'' என்றார்.

சில வருடங்களுக்கு பிறகு கேப்ரியல், உலோக வண்ணம் பூசும் தொழிற்சாலை ஒன்றை துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். மேலும் 3 இடங்களில் தனது தொழிற்சாலையின் கிளையைத் துவங்கி தனது தொழிலை விரிவுபடுத்தினார். பின்னர் 12 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊரான ஷிர்வா நகருக்கு திரும்பியுள்ளார். இதுவரை கல்யாணம் செய்துகொள்ளாத இவர், 60க்கும் மேற்பட்டோருக்கு கல்யாணத்துக்காக நிதியுதவி செய்துள்ளார். 

கேப்ரியல் கட்டிய விநாயகர் கோயில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த கோயிலில் 36 அங்குலத்தில் அழகிய கருப்பு வண்ணத்திலான விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோயிலின் அருகே அர்ச்சகருக்கென தனியாக வீடு கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நிர்வாக உரிமை நாகேஷ் ஹெக்டே, மற்றும் கேப்ரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னகர் குகியான் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com