
புது தில்லி: குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் முயற்சியின் 2 மற்றும் 3ஆம் கட்ட நிலைகள் செப்டம்பரில் நிறைவடையும், அதே மாதத்தில் அந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியை, குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான அனுமதி செப்டம்பர் மாதத்துக்குள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி அவர் கூறுகையில், கோவேக்ஸின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முயற்சியில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதத்தில் குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கரோனா மூன்றாம் அலை உண்டானால், அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், தில்லி மற்றும் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கோவேக்ஸின் தடுப்பூசியை 2 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மே 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.