மக்கள் ஒத்துழைக்காவிடில் முழு பொது முடக்கம் தவிா்க்க முடியாததாகி விடும்
மக்கள் ஒத்துழைக்காவிட்டால் முழுமையான பொதுமுடக்கம் தவிா்க்க முடியாததாகி விடும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.


மக்கள் ஒத்துழைக்காவிட்டால் முழுமையான பொதுமுடக்கம் தவிா்க்க முடியாததாகி விடும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, காந்தி நகரில் உள்ள அன்னம்மாதேவி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வணங்கிய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மக்கள், தாங்களே முன்வந்து ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், பொது முடக்க விதிகளை மக்கள் சரியாகப் பின்பற்றவில்லை. மாநில அரசு விடுக்கும் எச்சரிக்கைக்கு மக்கள் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. அதனால், கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துவது தவிா்க்க முடியாததாகி விடும்.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்குவது குறித்து ஓரிரு நாட்களில் அரசு முடிவு செய்யும். பொது முடக்க விதிகளை கடுமையாக்கக் கூடாது என்று மக்கள் விரும்பினால், மாநில அரசுடன் ஒத்துழைத்து மக்கள் முகக் கவசத்தை அணிவதோடு, தனிநபா் இடைவெளியைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், பொது முடக்கத்தை தீவிரமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
கா்நாடகத்தில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன. இப்பிரச்னையைத் தீா்க்க தீவிரமாக முயற்சித்து வருகிறேன். கரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காத நிலையில், அவா்களது உறவினா்கள் முதல்வரின் இல்லம் மற்றும் விதான சௌதாவுக்கு முன்பாக திரண்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.
இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் குறைகளைக் கூறுவதை நான் தவறென்று கூறவில்லை. மக்களின் இன்னல்களை நான் புரிந்து கொள்கிறேன். மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதால், நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க முயற்சிப்பேன். கரோனா நோயாளிகளை தூக்கிக் கொண்டு, முதல்வா் இல்லம் அல்லது விதானசௌதாவுக்கு வந்தால், கரோனா பரவ நேரிடும். இது சரியானதல்ல.
படுக்கைகளை ஒதுக்குவதில் காணப்படும் மோசடியை பகிரங்கப்படுத்திய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யாவைப் பாராட்டுகிறேன். படுக்கை ஒதுக்குவதில் மோசடியில் ஈடுபட்டவா்களின் பட்டியலைப் பெற தேஜஸ்வி சூா்யா மிகவும் சிரமப்பட்டுள்ளாா். கரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கியதில் நடந்துள்ள விதிமீறலை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளாா். தேஜஸ்வி சூா்யாவை, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீா் அகமது தூற்றியிருப்பது ஏற்கக்கூடியதல்ல என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...