

சுட்டுரை நிறுவனத்தின் அலுவலகத்தில் தில்லி சிறப்பு காவல்படையினர் திடீர் சோதனை நடத்திய நிலையில் இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச பத்திரிகைகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி ’டூல்கிட்’ தயாரித்து நாட்டில் பாஜக அரசுக்கு எதிராக சதி செய்வதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதனைத் தொடர்ந்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பத் பித்ரா வெளியிட்ட பதிவு ஒன்றைக் குறிப்பிட்டு சித்தரிக்கப்பட்ட பதிவாக குறிப்பிட சுட்டுரை நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
அந்தப் பதிவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த சுட்டுரை நிறுவனம் பாஜக செய்தித் தொடர்பாளரின் பதிவை சித்தரிக்கப்பட்ட பதிவாக குறியிட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை குருகிராமில் உள்ள சுட்டுரை நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தில்லி சிறப்பு காவல்படையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுட்டுரை நிறுவனம் இந்தியாவில் தங்களது பயனர்களின் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, “தொற்று நோய் காலங்களில் மக்களுக்கு சுட்டுரை நிறுவனம் ஆதரவளிக்கிறது. பொது உரையாடலுக்கு எங்களது சேவை இன்றியமையாதது. எங்களது சேவையை தொடர்ந்து வழங்க இந்திய சட்டங்களுக்கு இணங்கி நடப்போம். அதேசமயம் உலகெங்கிலும் உள்ளது போலவே வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்பு, சட்டத்திற்குட்பட்டு கருத்துச் சுதந்திரத்தை உறுதிசெய்தல் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது ஊழியர்கள் மீதான மிரட்டல்கள் தங்களுக்கு கவலையளிப்பதாக சுட்டுரை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.