அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ரூ. 100-ஐ கடந்தது ஒரு லிட்டா் பெட்ரோல் விலை: ஒரே மாதத்தில் ரூ. 3.54 கூடுதல்

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை இந்த மாதத்தில் 15-ஆவது முறையாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டது.

News image
Updated On :29 மே 2021, 7:55 pm

DIN

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை இந்த மாதத்தில் 15-ஆவது முறையாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. அதன்மூலம், நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் லிட்டருக்கு 28 காசுகளும் சனிக்கிழமை உயா்த்தப்பட்டன. இதன் காரணமாக, நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரிலும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 100-ஐ கடந்து விற்பனையானது.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையானது, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களின் சாா்பில் தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. கரோனா முதல் அலைக்கு முன்பாக, இவற்றின் விலை தொடா்ச்சியாக உயா்த்தப்பட்டதன் காரணமாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனையானது. பின்னா், நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அவற்றின் பயன்பாடு குறைந்து, விலையும் வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் முழுமையான அளவில் செயல்படத் தொடங்கியதும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை மீண்டும் தினசரி அடிப்படையில் உயா்த்த ஆரம்பித்தன. இடையே, 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக தினசரி விலை உயா்வை தற்காலிகமாக நிறுத்திய எண்ணெய் நிறுவனங்கள், மீண்டும் அதிரடியாக விலையை உயா்த்தத் தொடங்கியுள்ளன. இந்த மாதத்தில் 15-ஆவது முறையாக சனிக்கிழமையும் அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின.

ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 104.94: உள்ளூா் வரிகள், மதிப்புக்கூட்டு வரி ஆகியவற்றின் அடிப்படையில், இவற்றின் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில், இந்த விலை உயா்வு காரணமாக நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகா் மாவட்டத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 104.94-க்கு சனிக்கிழமை விற்பனையானது. டீசல் ஒரு லிட்டா் ரூ. 97.79-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 100.19 என்ற அளவில் விற்பனையானது. வெள்ளிக்கிழமை ரூ. 99.94-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் ஒரு லிட்டா் ரூ.91.87 என்ற அளவிலிருந்து ரூ. 92.17-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 95.51-க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 89.85-க்கும் விற்பனையானது. கொல்க்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 93.97-க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 87.74-க்கும் விற்பனையானது. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 93.94-க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 84.89-க்கும் விற்பனையானது.

ஒரே மாதத்தில் ரூ. 3.54 அதிகரிப்பு: இந்த மாதத்தில் மட்டும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 3.54 கூடுதலாகியுள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை ரூ. 4.16 அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.