47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐ.மு.கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்ற சிஏஜி சதி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய் தீட்டிய சதி

News image
Updated On :2 நவம்பர் 2021, 10:20 pm

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய் தீட்டிய சதி தற்போது அம்பலமாகியுள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சிஏஜியாக இருந்த வினோத் ராய் சமர்ப்பித்த அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 இதனிடையே, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிஏஜி அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று தனக்கு நெருக்கடி கொடுத்த எம்.பி.க்களில் ஒருவர் என்று காங்கிரஸ் பிரமுகர் சஞ்சய் நிருபமைக் குறிப்பிட்டதற்காக அவரிடம் வினோத் ராய் கடந்த வியாழக்கிழமை மன்னிப்பு கோரினார்.
 முன்னதாக, வினோத் ராய் கடந்த 2014-இல் எழுதிய புத்தகத்தில் இந்தக் குற்றச்சாட்டை கூறியதற்காகவும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் இதைக் குறிப்பிட்டதற்காகவும் அவருக்கு எதிராக சஞ்சய் நிருபம் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
 இந்நிலையில், வினோத் ராய் மன்னிப்பு கேட்டிருப்பது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தாம் வகித்த அரசமைப்புச் சட்ட பதவியான சிஏஜி-யின் கண்ணியத்தை வினோத் ராய் குலைத்துவிட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் தேசம் தவறாக வழிநடத்தப்பட்டது. அதன் விளைவாகவே மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதனால் ஜனநாயகத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் ஜனநாயகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் எந்த அளவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை சீர்குலைக்க சிஏஜி என்ற வகையில் வினோத் ராய் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மிக முக்கியமான அரசமைப்புச் சட்ட பதவியை வகித்தார். புனிதமான அப்பதவியின் கண்ணியத்தைக் குலைத்ததுடன் பாசிச சக்தி மத்தியில் ஆட்சிக்கு வரவும் அவர் வழிவகுத்தார். அதனால் நாடு இப்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 வினோத் ராய் இப்போது அம்பலப்பட்டுவிட்டார். அவரது சதியையும் நாட்டின் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது 2ஜி அலைக்கற்றை வழக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கும் எங்கே போயின?
 காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்கியது. ஆனால் தற்போது ஜனநாயகம் தீவிரமான சவால்களைச் சந்தித்து வருகிறது. இதுபற்றி மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம்.
 நாட்டில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. விண்ணை முட்டும் பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை மக்களும் குறிப்பாக இளைஞர்களும் புரிந்து கொள்வது அவசியம்.
 மோடி அரசு சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. நெருக்கடிக்கு இடையே நீதித்துறை பணியாற்றி வருகிறது. மத்திய அரசும், உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசும் மதத்தின் பெயரில் மக்களைப் பிளவுபடுத்த முயன்று வருகின்றன என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.