பாஜகவில் கலக குரல்; பிரதமருக்கு கடிதம் எழுதிய வருண் காந்தி

சமீக காலமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைபாட்டை மீறி வருண் காந்தி செயல்பட்டதால் பாஜக தலைமை அவர் மீது அதிருப்தியில் இருக்கிறது.
வருண்காந்தி (கோப்புப்படம்)
வருண்காந்தி (கோப்புப்படம்)

கடந்த சில மாதங்களாகவே, கட்சியின் நிலைபாடுகளிலிருந்து மாறுபட்ட வருண் காந்தி கருத்து கூறிவருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் நான்கு கோரிக்கைகளை வருண் காந்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவை முன்னதாகவே எடுத்திருந்தால் 700 விவசாயிகள் உயிருடன் இருந்திருப்பார்கள் எனக் கூறியுள்ள வருண் காந்தி, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், விவசாயிகளுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டும் என்றும் குறைந்த பட்ச ஆதரவு விலை திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வருண் காந்தி கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.

கடந்த மாதம், உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் கார் ஏறியதாகக் கூறப்படும் விவகாரத்தை மேற்கோள் காட்டிய வருண் காந்தி, "மூத்த பதவிகளில் அமர்ந்திருக்கும் பல தலைவர்கள் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய அறிக்கைகள் மற்றும் விவசாய இயக்கத்தை சுற்றி உருவாக்கப்பட்ட விரோதச் சூழலின் விளைவால்தான், அக்டோபர் 3 அன்று, லக்கிம்பூர் கேரியில் எங்கள் விவசாய சகோதரர்கள் ஐந்து பேர் மீது வாகனங்கள் ஏற்றப்பட்டது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் நமது ஜனநாயகத்தின் மீது ஒரு களங்கம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீது நியாயமான விசாரணை நடக்கும் வகையில் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வருண் காந்தி முன்னதாகவே கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த சூழ்நிலையில்தான், பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து வருண் காந்தி நீக்கப்பட்டார்.

நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வருண் காந்தியும் அவரது தாயார் மேனகா காந்தியும் கடந்த 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com