லக்கிம்பூர் பிரச்னையை கையில் எடுத்த வருண் காந்திக்கு நேர்ந்தது இதுதான்; பாஜகவின் செயலுக்கு காரணம் என்ன?

லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எம்பி வருண்  காந்தி கடும் விமரிசனங்களை மேற்கொண்டிருந்த நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி
வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி

பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து எம்பி வருண் காந்தி, அவரின் தாயார் மேனகா காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் நெரியில் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு அவர் கடும் விமரிசனங்களை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், பாஜக வெளியிட்ட 80 பேர் கொண்ட தேசிய  செயற்குழு பட்டியலில் வருண் காந்தி, மேனகா காந்தி ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை.

தேசிய செயற்குழுவில் புதிதானவர்களை சேர்ப்பதும் நீக்குவதும் வழக்கமான ஒன்று, இதற்கும் அவர் மேற்கொண்ட விமரிசனத்திற்கு தொடர்பில்லை என பாஜக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அமைதியாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகளி்ன் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான கார் ஏறியதில் 8 பேர் உயிரிழந்தனர். 

அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான் விவசாயிகளை கொலை செய்தார் என தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

இந்த பிரச்னை குறித்து பாஜகவினர் யாரும் வாய் திறக்காத நிலையில், வருண் காந்தி மட்டும் தொடர் விமரிசனங்களை மேற்கொண்டுவந்தார். இதுகுறித்து உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "அவர்களுக்கு பதிலாக பாஜக செயற்குழுவில் உ.பி.யைச் சேர்ந்த மற்ற மூத்த தலைவர்கள் இடம்பெற்றுளனர். குறைந்தது பத்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

மக்களிடம் அவர்களின் செல்வாக்கு குறைந்திருக்கக் கூடும். பல்வேறு சூழல்களில் வருண் காந்தியின் அறிக்கைகளை பார்த்துவருகிறோம். இது கட்சியின் முடிவு. முழுத் தவறும் தலைவர்களின் மீது உள்ளது போல் அவர் காட்டிக் கொண்டார். நாங்கள் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று நம்புகிறோம். முழு எதிர்க்கட்சியும் பாஜகவை குறிவைக்கும் நேரத்தில் அவர் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்" என்றார்.

இந்த விவகாரத்தில், வருண் காந்தியின் செயல்பாடுகள் மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருந்ததாக பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com