உல்லாச கப்பல் விவகாரம் ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களை போல இருந்தது: போதை தடுப்பு பிரிவு

உல்லாச கப்பலில் போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 16 பேரை போதை தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை கடற்கரையில் உல்லாச கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருள் சிக்கிய விவகாரத்தை போதை தடுப்பு பிரிவு விசாரித்துவருகிறது. செவ்வாய்கிழமை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது போதை தடுப்பு பிரிவு இதுகுறித்து கூறுகையில், "அகதா கிறிஸ்டி, ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களை போன்று நொடிக்கு நொடி இந்த வழக்கு திருப்பங்கள் நிறைந்ததாக உள்ளது" என தெரிவித்துள்ளது.

முன்னதாக, போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 16 பேரை போதை தடுப்பு பிரிவு கைது செய்தது. அதேபோல், கலீர் ஷேக், ஸ்ரேயன்ஸ் நாயர், மனிஷ் ராஜ்காரியா, ஆவின் சாஹு ஆகிய குற்றம்சாட்டப்பட்டவர்களை அக்டோபர் 11ஆம் தேதி வரை விசாரிக்க போதை தடுப்பு பிரிவுக்கு கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி ஆர்.எம். நேர்லிகர் அனுமதி வழங்கியிருந்தார்.

அப்போது போதை தடுப்பு பிரிவு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அத்வைத் சேத்னா, "அகதா கிறிஸ்டி, ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களை போன்று நொடிக்கு நொடி இந்த வழக்கு திருப்பங்கள் நிறைந்ததாக உள்ளது" என்றார். பின்னர் பேசிய நீதிபதி நேர்லிகர், "குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு வழக்கின் அடிமட்டத்தை அலசி ஆராயும் வகையில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது" என்றார்.

உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர்  அந்தக் கப்பலில் ஏறினர்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள், சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து உள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான நமஸ்க்ரே என்ற நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com