பூஞ்ச் என்கவுன்டரின் போது வீரமரணம் அடைந்த பஞ்சாப் வீரரின் உடல் சொந்த ஊர் வந்தது

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரா்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
பூஞ்ச் என்கவுன்டரின் போது வீரமரணம் அடைந்த பஞ்சாப் வீரரின் உடல் சொந்த ஊர் வந்தது
பூஞ்ச் என்கவுன்டரின் போது வீரமரணம் அடைந்த பஞ்சாப் வீரரின் உடல் சொந்த ஊர் வந்தது
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரா்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தில் வீரமரணம் அடைந்த நைப் சுபேதார் ஜஸ்விந்தர் சிங் உடல் பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான மனா தல்வாண்டி கிராமத்துக்கு இன்று காலை வந்தது.

தனது கணவரின் உடலைப் பார்த்துக் கதறி அழுத மனைவி, இன்னும் 15 நாள்களில் வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்தவர், இப்போதே வந்துவிட்டாரே என்று கூறி கதறினார்.

ஒரு வாரத்துக்கு முன்புதான் தொலைபேசியில் பேசினேன். விடுமுறை எடுத்துக் கொண்டு 15 நாள்களில் வீட்டுக்கு வருகிறேன் என்றார். அவரது மகனையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறி அழுதது, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தனது மகனுடன் வீரமரணம் அடைந்த 5 பேருமே எனது மகன்கள்தான் என்றும், எனது ஒரே பேரன் வளர்ந்ததுமே அவனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் என்றார் ஜஸ்விந்தர் சிங்கின் தாய் குர்பால் கௌர்.

திங்கள்கிழமை நடந்த என்கவுன்டரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியிருந்ததாவது:

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகக் கிடைத்தத் தகவலின் பேரில், சாம்ரா் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்பு படை தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த சண்டையில் ராணுவ இளநிலை அதிகாரி (ஜேசிஓ) உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அந்தப் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத வகையில், அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து தீவிரப்படுத்தப்பட்ட என்று கூறியிருந்தார்.

39 வயதாகும் ஜஸ்விந்தர், கபுர்தலாவைச் சேர்ந்த குடும்பத்தின் இளைய மகன். இவரது தந்தை ஹர்பஜன் சிங் இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மற்றொரு சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றிவர்தான். கடந்த மே மாதம் தனது தந்தையின் இறப்புக்காக வீட்டுக்கு வந்தார் ஜஸ்விந்தர். வரும் நவம்பரில், இறந்தவர்களுக்கான சில சடங்குகளை செய்ய தான் விடுமுறை எடுத்துவிட்டு வருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் வீட்டுக்கு வரமாட்டார் என்றோ, அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டியது வரும் என்றோ நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று கதறுகிறார்கள் குடும்பத்தினர். ஜஸ்விந்தருக்கு சுக்பிரீத் என்ற மனைவியும் 13 வயது மகனும், 11 வயது மகளும் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com