39 வயதாகும் ஜஸ்விந்தர், கபுர்தலாவைச் சேர்ந்த குடும்பத்தின் இளைய மகன். இவரது தந்தை ஹர்பஜன் சிங் இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மற்றொரு சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றிவர்தான். கடந்த மே மாதம் தனது தந்தையின் இறப்புக்காக வீட்டுக்கு வந்தார் ஜஸ்விந்தர். வரும் நவம்பரில், இறந்தவர்களுக்கான சில சடங்குகளை செய்ய தான் விடுமுறை எடுத்துவிட்டு வருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் வீட்டுக்கு வரமாட்டார் என்றோ, அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டியது வரும் என்றோ நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று கதறுகிறார்கள் குடும்பத்தினர். ஜஸ்விந்தருக்கு சுக்பிரீத் என்ற மனைவியும் 13 வயது மகனும், 11 வயது மகளும் உள்ளனர்.