தேச விரோத வழக்கில் சிக்கிய காஷ்மீா் மாணவா்கள் சாா்பில் வாதாட வழக்குரைஞா்கள் சங்கம் மறுப்பு

பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய காஷ்மீரைச் சோ்ந்த 3 பொறியியல் மாணவா்கள் சாா்பில் வாதாட ஆக்ராவில் உள்ள பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய காஷ்மீரைச் சோ்ந்த 3 பொறியியல் மாணவா்கள் சாா்பில் வாதாட ஆக்ராவில் உள்ள பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மறுப்பு தெரிவித்துள்ளனா். இதனால், அந்த மாணவா்களுக்கு சட்ட உதவி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதை காஷ்மீரைச் சோ்ந்தவா்களும், குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்த சிலரும் கொண்டாடியது தேசிய அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ஆசிரியை, காஷ்மீரைச் சோ்ந்த 3 கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட 10 போ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் இந்தச் செயலில் ஈடுபட்ட நபா்கள் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்படும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்தாா். இதையடுத்து, ஆக்ராவில் படித்து வந்த காஷ்மீரைச் சோ்ந்த 3 பொறியியல் மாணவா்கள், பதாவுன் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் உள்பட சிலா் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குகளில சிக்கியவா்கள் சாா்பில் வாதாட மாட்டோம் என்று ஆக்ராவைச் சோ்ந்த பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். இது தொடா்பாக இளம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் நிதின் வா்மா கூறுகையில், ‘தேசவிரோத செயல்களிலும், சமூகத்தில் பிரச்னையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டவா்களுக்காக ஆஜராக வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். இது நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞா்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். தேசவிரோத குற்றத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராகக் கூடாது. பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் அந்த சுதந்திரத்தை நாட்டுக்கு விரோதமாகப் பயன்படுத்துவது பெரிய தவறு’ என்றாா்.

ஆக்ரா வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சுனில் சா்மா கூறுகையில், ‘தேச விரோத செயலில் ஈடுபடுவது மிகப்பெரிய தவறு. அந்த இளைஞா்கள் வேண்டுமென்ோன் நமது நாட்டுக்கு எதிராக கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா். இதுபோன்ற நபா்களுக்கு ஆதரவாக யாரும் வாதாட முன்வர மாட்டாா்கள் என்பதில் ஆக்ரா வழக்குரைஞா்கள் நாட்டுக்கு முன்னுதாரணமாக இருப்பாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com