துர்கா பூஜை செலவைக் குறைத்து ஆதரவற்றோருக்கு அளிக்க முடிவு

துர்கா பூஜைக்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை குறைத்துக் கொண்டு மனிதாபிமான செயல்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதென துர்கா பூஜைக் குழுக்கள் முடிவு செய்துள்ளன. 
துர்கா பூஜை செலவைக் குறைத்து ஆதரவற்றோருக்கு அளிக்க முடிவு
துர்கா பூஜை செலவைக் குறைத்து ஆதரவற்றோருக்கு அளிக்க முடிவு

கொல்கத்தா: கரோனா இரண்டாவது அலை பரவல், யாஸ் புயல் தாக்குதல் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ள மேற்கு வங்கத்தில், இந்த ஆண்டு துர்கா பூஜைக்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை குறைத்துக் கொண்டு மனிதாபிமான செயல்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதென துர்கா பூஜைக் குழுக்கள் முடிவு செய்துள்ளன. 

கொல்கத்தா நகரின் முக்கியமான துர்கா பூஜைக் குழுவான சமாஜ்சேபி சங்கம் சார்பில் "ஸ்நேஹோ' திட்டத்தின் கீழ் கரோனா தொற்றால் பெற்றோர்கள் உயிரிழந்ததால் அனாதைகளாக்கப்பட்ட 10 சிறார்களின் ஓராண்டுக்கான கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து அக்குழுவின் பொதுச் செயலாளர் அரிஜித் மொய்த்ரா பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது: 

பூஜை என்பது மனிதகுலத்திற்கு சேவை செய்வதாகும். இந்த துர்கா பூஜையையொட்டி  எல்லா ஆடம்பரத்தையும் தவிர்த்திட முடிவு செய்துள்ளோம். இரண்டாவது அலை கரோனா பரவல் காரணமாக எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தை தனது பெற்றோரை இழந்துள்ளது.

எங்கள் குழுவின் உறுப்பினர்கள் இதே நிலையிலுள்ள 10 சிறார்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைச் 'ஸ்நேஹோ' திட்டத்தின்கீழ் செய்து தர முடிவு செய்துள்ளனர் என்றார்.  

துர்கா பூஜைக் குழுக்களின் இந்த முயற்சியைப் பாராட்டிய ராஷ்பிஹாரி எம்எல்ஏ தேபாஷிஸ் குமார் கூறுகையில், துர்கா பூஜை அமைப்பாளர்கள் ஏழை, எளிய மக்களுக்குச் செய்யும் சேவைகளால் துர்கா தேவி மகிழ்ச்சியடைவார். இந்த சமாஜ்சேபி பூஜைக் குழுவுக்கு அனைத்து ஆதரவையும் அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார். 

கொல்கத்தாவில் உள்ள முன்னணி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்த துர்கா பூஜை குழு, இந்த ஓராண்டில் ஏற்பட்ட  இரண்டு சூறாவளிப் புயல் தாக்குதலால் பேரழிவை சந்தித்த சுந்தரவனக் காடுகள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கான செலவையும் இதர செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும். 

"எங்கள் குழு வரும் அக்டோபர் 3-ஆம் தேதி சுந்தரவனப் பகுதியில் உள்ள சோட்டோ மொல்லகாலி பகுதிக்குச் சென்று அப்பகுதியில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்குத் தேவையான புத்தகங்களையும் விளையாட்டுப் பொருள்களையும் அளிக்கும். இதற்காக இந்த ஆண்டில் நடத்துவதாக இருந்த துர்கா பூஜைக்கான செலவின் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வோம்' என்றார் அந்தக் குழுவின் அமைப்பாளர் ஒருவர். 

இதேபோல, புரூலியா மாவட்டம்,  பவானிபூர் - 75 பள்ளி அமைப்பைச் சேர்ந்த குழு, நடனக் கலைஞர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் திருவிழாக்கள், கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல பாரம்பரியக் கலைஞர்கள், கைவினைஞர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அவர்களில் சிலருக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம் என்று பவானிபூர் 75 பள்ளி அமைப்பின் செயலாளர் சுபீர் தாஸ் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com